
கோலாலம்பூர், நவம்பர் 13 – நாடு முழுவதும் நடத்தப்பட்ட அதிரடிச் சோதனையில் 100-க்கும் மேற்பட்ட இணைய மோசடிக் கும்பல்கள் முறியடிக்கப்பட்டதுடன், 932 பேர் கைது செய்யப்பட்டதாக புக்கிட் அமானின் வணிகக் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ ருஸ்டி முகமது ஈசா (Rusdi Mohd Isa) தெரிவித்தார்.
அக்டோபர் 19 முதல் 31ஆம் தேதி வரை நடைபெற்ற ‘Ops Magpie’ நடவடிக்கையில் மொத்தம் 153 இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன. கைது செய்யப்பட்டவர்களில் 106 பேர் மலேசியர்கள்; எஞ்சிய 826 பேர் வெளிநாட்டினர். அவர்களில் 538 பேர் சீனர்கள், 93 பேர் வியட்நாமியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மோசடிக் கும்பல்கள் போலி முதலீட்டுத் திட்டங்கள், காதல் மோசடிகள், தொலைபேசி மோசடிகள், இணைய சூதாட்டம் மற்றும் போலி வேலைவாய்ப்பு விளம்பரங்கள் மூலம் பொதுமக்களைக் குறிவைத்துள்ளன.
சோதனைகளின்போது 2,058 கைப்பேசிகள், 433 மடிக்கணினிகள், 161 கணினிகள், 112 ரௌட்டர்கள் மற்றும் மோடம்கள், 40 கடப்பிதழ்கள் மற்றும் விசாக்கள், ஏழு வாகனங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
மோசடியில் பணத்தை இழந்தவர்கள் உடனடியாக தேசிய மோசடி பதிலளிப்பு மையத்தை தொடர்புகொண்டு, காவல்துறையிலும் புகார் அளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.



