
ஜோகூர், நவம்பர் 14 – ஜோகூர், செனாய், தாமான் டேசா இடாமான் (Taman Desa Idaman) பகுதியில் குடிநுழைவுத் துறையும் மலேசிய எல்லைப் பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாட்டு ஆணையமும் (AKPS) இணைந்து நடத்திய சோதனையில் 205 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டனர்.
அதிகாலை 1.30 மணிக்கு நடைபெற்ற இச்சோதனையில், 543 வெளிநாட்டினர் பரிசோதிக்கப்பட்டனர். அவர்களில் 57 பெண்கள் உட்பட 205 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் 20 முதல் 56 வயதுக்குட்பட்ட மியான்மார், இந்தோனேசியா, வங்காளதேசம், நேப்பாளம், தாய்லாந்து, பாகிஸ்தான் மற்றும் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
அடையாள ஆவணங்கள் இல்லாதது, அனுமதிக்கப்பட்ட காலத்தைத் தாண்டி நாட்டில் தங்கியிருந்தது உள்ளிட்ட குடிநுழைவுச் சட்ட மீறல்கள் கண்டறியப்பட்டன. சோதனையின்போது ஆளில்லா வானூர்திகளும் (Drone) கண்காணிப்புக்குப் பயன்படுத்தப்பட்டன.
மேலும், வெளிநாட்டினருக்கான பொழுதுபோக்கு மையமாக மாற்றப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் வீடும் சோதனையிடப்பட்டது. கைது செய்யப்பட்டவர்கள் மேல் நடவடிக்கைக்காக செத்தியா த்ரோபிக்காவிலுள்ள (Setia Tropika) உள்துறை அமைச்சின் வளாகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.



