
லங்காவி, நவம்பர்-21,கெடா, லங்காவியில் மன உளைச்சலுக்கு ஆளானதாக நம்பப்படும் 35 வயது பெண் ஒருவரைத் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
நேற்று பிற்பகல் 3.16 மணியளவில், Kuala Muda பகுதியில் உள்ள கடல் அலைத் தடுப்புச் சுவரில் பெண் ஒருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாகத் தீயணைப்புப் படையினருக்குத் தகவல் கிடைத்தது.
சம்பவ இடம் விரைந்த மீட்புக் குழுவினர், கடற்கரையிலிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் அப்பெண் இருப்பதைக் கண்டனர்.
இதையடுத்து, அவரிடம் நிதானமாகப் பேசி சமாதானப்படுத்திய தீயணைப்புப் படையினர், ஒருவழியாகப் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து வந்தனர்.
மீட்கப்பட்ட பெண்ணுக்குக் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை என்றும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
பின்னர், மேல் நடவடிக்கைக்காக அப்பெண் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.



