Latestமலேசியா

PRIMAS தலைவர் பதவிக்குப் போட்டியிடும் கிருஷ்ணன்; உணவகத் துறையின் சவால்களுக்குத் தீர்வு காண உறுதி

மலேசிய இந்திய உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் (PRIMAS) துணைத் தலைவர் சி. கிருஷ்ணன், வரும் நவம்பர் 25ஆம் தேதி சுபாங் ஜெயாவில் நடைபெறவுள்ள சங்கத்தின் ஆண்டு பொதுக்கூட்டத் தேர்தலில் தலைவர் பதவிக்குப் போட்டியிடவிருக்கிறார்.

சங்கத்தில் நீண்டகால அனுபவம் கொண்டுள்ள அவர், கடந்த ஆறு ஆண்டுகளாகத் துணைத் தலைவராகவும், அதற்கு முன் ஆறு ஆண்டுகள் உதவித் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். செயலாளராகவும் துணைச் செயலாளதாகவும் பல தவணைகள் பொறுப்பு வகித்ததுடன், முன்னாள் தலைவர் டத்தோ ரெனா. ராமலிங்கத்தின் கீழ் சுமார் 16 ஆண்டுகள் செயலாளராகப் பணியாற்றிய அனுபவமும் தமக்கு இருப்பதாக அவர் கூறினார்.

தற்போது இந்திய உணவக உரிமையாளர்கள் வெளிநாட்டுத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதில் அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் கட்டுப்பாடுகளால் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

அதேவேளை விலைவாசி உயர்வு, பணியாளர் பற்றாக்குறை, அரசாங்கத் துறைகளிடமிருந்து அனுமதிகளைப் பெறுவதில் உள்ள சவால்கள், வாடிக்கையாளர்களின் மாறிவரும் தேவைகளைப் பூர்த்தி செய்தல் உள்ளிட்ட பல பிரச்சினைகள் உணவகத் துறையைப் பாதிக்கின்றன. இத்தகைய விவகாரங்களில் அரசாங்கத்துடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி, உறுப்பினர்களின் நலனுக்காகச் சங்கம் பாலமாகச் செயல்படுவதை உறுதிப்படுத்தவிருப்பதாக கிருஷ்ணன் குறிப்பிட்டார்.

மேலும், இன்றைய காலகட்டத்துக்கு ஏற்ப உணவகங்களின் செயல்பாடுகள் மேம்படுத்தப்பட வேண்டும். தரமான, சுத்தமான உணவுகளை விரைவாக வழங்குதல், பணியாளர்களை முறையாகப் பயிற்றுவித்தல், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளைப் புரிந்து கொள்ளுதல் ஆகியவற்றின் அவசியம் குறித்து உறுப்பினர்களிடையே விழிப்புணர்வையும் பயிற்சியையும் ஏற்படுத்தப் பாடுபடவிருப்பதாகவும் அவர் விவரித்தார்.

சங்கத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இருந்தாலும், புதிதாகப் பல உணவகங்கள் தொடங்கப்பட்டு வருவதால் அவற்றின் உரிமையாளர்களையும் சங்கத்தில் இணைத்து உறுப்பினர் எண்ணிக்கையையும் ஒற்றுமையையும் வலுப்படுத்த விரும்புவதாக கிருஷ்ணன் தெரிவித்தார்.

இந்த நோக்கங்களையும் திட்டங்களையும் முன்னிறுத்தியே தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதாகக் கிருஷ்ணன் கூறினார். எனவே உறுப்பினர்கள் அனைவரும் தமக்கு ஆதரவளித்து வெற்றிபெறச் செய்யுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!