
கோலாலம்பூர், நவம்பர்-25,இந்தியப் பிரஜைகளுக்கான விசா விலக்குச் சலுகையை இரத்துச் செய்யும் முடிவை அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என சுற்றுலாத்துறை முன்னாள் அமைச்சர் டத்தோ ஸ்ரீ நஸ்ரி அசிஸ் வலியுறுத்தியுள்ளார்.
அந்த முடிவு நாட்டின் சுற்றுலாத்துறையைப் பாதிப்பதோடு, இந்தியாவுடனான இருதரப்பு உறவிலும் விரிசலை ஏற்படுத்தக்கூடும் என அவர் எச்சரித்தார்.
விசா விலக்குச் சலுகையைத் தவறாகப் பயன்படுத்தி சட்டவிரோதமாகப் பணிபுரியும், அல்லது அனுமதிக்கப்பட்ட காலத்திற்கு மேல் தங்கியிருக்கும் இந்தியப் பிரஜைகளின் உண்மையான எண்ணிக்கையை அரசாங்கம் முதலில் ஆராய வேண்டும் என்றார் அவர்.
ஒரு சிலர் செய்யும் தவறுகளுக்காக ஒட்டுமொத்த இந்தியச் சுற்றுப் பயணிகளையும் தண்டிப்பது நியாயமல்ல என, FMT-யிடம் அவர் குறிப்பிட்டார்.
2024-ஆம் ஆண்டு 1.36 மில்லியனாகப் பதிவான இந்தியச் சுற்றுப் பயணிகளின் எண்ணிக்கை, கடந்தாண்டு 1.56 மில்லியனாக அதிகரித்திருந்ததையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்தியப் பிரஜைகளை முன்கூட்டியே கடுமையான பரிசோதனைக்கு உட்படுத்தும் நோக்கில், அவர்களுக்கான 30 நாள் விசா விலக்குச் சலுகை வரும் டிசம்பர் 31-ஆம் தேதியுடன் முடிவுக்கு வரும் என உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நாசூத்தியோன் இஸ்மாயில் முன்னதாக அறிவித்திருந்தார்.
எனினும், அச்சலுகை நீட்டிக்கப்படுவதற்கான சாத்தியம் இன்னும் இருப்பதாகப் புது டெல்லியிலுள்ள மலேசியத் தூதரகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



