
ம.இ.கா. தனது 80 ஆண்டுப் பயணத்தை நினைவுகூர்வதுடன் நின்றுவிடாமல், கல்வி மற்றும் பொருளாதார முன்னேற்றத்தின் மூலம் இந்தியச் சமூகத்தின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று அதன் தேசியத் தலைவர் தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.
அனைத்துலக Austin மாநாட்டு மையத்தில், ம.இ.கா.வின் 80ஆவது தேசியப் பேராளர் மாநாட்டில் உரையாற்றிய அவர், கட்சியின் எதிர்கால நிலைத்தன்மை அதன் வரலாற்றால் மட்டுமே தீர்மானிக்கப்படாது என்றும், சமூகத்துக்கு அது வழங்கும் பங்களிப்பும் சாதனைகளுமே அதன் அரசியல் இடத்தை நிலைநிறுத்தும் என்றும் கூறினார்.
பாரிசான் நேஷனலுடனான புதுப்பிக்கப்பட்ட ஒத்துழைப்பில், ம.இ.கா. செயற்பாட்டுடனும் மரியாதைக்குரிய பங்காளியாகவும் இருக்க வேண்டும் என்றார். கூட்டணியின் திசையை வடிவமைப்பதிலும், மக்களுக்கான முடிவுகளை வழங்குவதிலும் கட்சி பங்கெடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
சமூகத்தின் கல்வி முன்னேற்றம் தொடர்ந்து முக்கிய முன்னுரிமையாக இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்ட தான்ஸ்ரீ விக்னேஸ்வரன், ம.இ.கா.வுடன் தொடர்புடைய MIED, AIMST பல்கலைக்கழகம் மற்றும் TAFE கல்லூரி போன்ற கல்வி நிறுவனங்களின் பங்களிப்பைச் சுட்டிக்காட்டினார்.
AIMST பல்கலைக்கழகத்துக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் மத்திய அரசின் மானியத்தைத் தொடர்வதற்கும், குறைந்த வருமானக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு உதவ கூடுதலாக ஒரு மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டதற்கும் அவர் நன்றி தெரிவித்தார்.
1984ஆம் ஆண்டு முதல் MIED நிறுவனம், பல்வேறு கல்வி நிலைகளில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு உதவியுள்ளது. இதற்காக வழங்கப்பட்ட கல்வி உதவித்தொகை மற்றும் கடன்களின் மொத்த மதிப்பு 243 மில்லியன் ரிங்கிட்டைத் தாண்டியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
பல்கலைக்கழகக் கல்வியுடன், டிவெட் மற்றும் தொழிற்பயிற்சி, தொழில்துறைச் சான்றிதழ்கள், டிஜிட்டல் திறன்கள், தொழில்முனைவு ஆகியவற்றிலும் இளைஞர்களுக்கு வாய்ப்புகள் விரிவுபடுத்தப்பட வேண்டும் என்றார். 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் டிவெட் திட்டங்களுக்கு 7.9 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், அந்த வாய்ப்புகளை இந்திய இளைஞர்களும் முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
இதற்காக, 2027 ஜனவரிக்குள் டிவெட் சிறப்பு மையம் ஒன்றை அமைக்க ம.இ.கா. திட்டமிட்டுள்ளது. இளைஞர்களைத் தகுந்த பயிற்சியில் இணைத்து, பயிற்சி நிலையங்களையும் தொழில்துறையையும் தொடர்புபடுத்தி, பயிற்சிக்குப் பிறகு வேலை கிடைப்பதையும் கண்காணிப்பதே அதன் நோக்கம் என அவர் விளக்கினார்.
பொருளாதார முன்னேற்றம் குறித்துப் பேசிய அவர், இந்தியச் சமூகத்தின் பங்கு வருமானம் ஈட்டுவதுடன் முடிந்துவிடக்கூடாது; குடும்பங்கள் சேமிப்பு, முதலீடு, வீடு மற்றும் வணிகச் சொத்துகளைப் பெறுவதற்கான வழிகளும் உருவாக்கப்பட வேண்டும் என்றார். இந்தியச் சமூகத்தின் பங்கு உரிமையை மூன்று சதவீதமாக உயர்த்தும் இலக்கை ம.இ.கா. தொடர்ந்து முன்வைப்பதாகவும் தெரிவித்தார்.
2017ஆம் ஆண்டு மலேசிய இந்தியர் செயல் திட்டத்தின் கீழ், இந்தியச் சமூகத்துக்காக 1.5 பில்லியன் யூனிட் அமானா சஹாம் 1மலேசியா ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் M40 மற்றும் T20 குடும்பங்கள் தலா 30 ஆயிரம் யூனிட்கள் வரை முதலீடு செய்ய வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டது.
அதே திட்டத்தின் கீழ், தகுதியுள்ள 100,000 B40 இந்தியக் குடும்பங்கள் ASM-இல் முதலீடு செய்ய, ஐந்து ஆண்டுகளில் 500 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான வட்டியில்லா நிதியுதவி வழங்கவும் திட்டமிடப்பட்டது. ஒரு குடும்பத்துக்கு 5,000 ரிங்கிட் வழங்கும் வகையில் அமைந்த இந்தத் திட்டம் 2018 பிப்ரவரியில் தொடங்கப்பட்டாலும், பின்னர் நின்றுவிட்டதாகவும், பயனடைய வேண்டிய சுமார் 80,000 குடும்பங்கள் இன்னும் அந்த வாய்ப்பைப் பெறவில்லை என்றும் தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறினார். இந்தத் திட்டத்தை மீண்டும் பரிசீலித்து நடைமுறைப்படுத்த உதவுமாறு அவர் கோரிக்கை விடுத்தார்.
சமூகத்தின் சொத்து மற்றும் பங்கு முதலீட்டு நிலையை விரிவாக ஆய்வு செய்து, இடைவெளிகளை அடையாளம் காணும் நீண்டகாலத் திட்டமும் தேவை என்றார். சிறு வணிகங்களுக்கு நிதி மற்றும் சந்தை வாய்ப்புகள், தொழில்முனைவோருக்குப் பயிற்சி, விநியோகச் சங்கிலியில் பங்கேற்கும் வாய்ப்பு ஆகியவை உருவாக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சொத்துடைமை வழியாக அடுத்த தலைமுறைக்கு முன்னேற்றப் பாதையை உருவாக்குவதே ம.இ.கா.வின் எதிர்பார்ப்பாக இருக்க வேண்டும். கட்சியின் அடுத்த அத்தியாயம் வார்த்தைகளால் அல்ல, சமூகத்துக்காகச் செய்யும் செயல்களால் எழுதப்பட வேண்டும் என்பதே விக்னேஸ்வரன் உரையின் மையச் செய்தியாக இருந்தது.



