
கோலாலம்பூர், செப்டம்பர் 30 – KLIA எக்ஸ்பிரஸ் மற்றும் KLIA டிரான்சிட் ரயில் சேவைகளுக்கான கட்டணம் 2027 ஜனவரி 1 முதல் 10 ரிங்கிட் வரை உயர்த்தப்படவுள்ளது.
இதன்படி, KL சென்ட்ரலிலிருந்து KLIA விமான நிலையத்திற்குச் செல்லும் பெரியவர்களுக்கான ஒருவழிப் பயணக் கட்டணம் 55 ரிங்கிட்டிலிருந்து 65 ரிங்கிட்டாக அதிகரிக்கும். மற்ற வழித்தடங்களுக்கான கட்டணங்களும் மாற்றம் செய்யப்படவுள்ளன.
2016ஆம் ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக கட்டணம் உயர்த்தப்படுவதாக Express Rail Link (ERL) நிறுவனம் தெரிவித்துள்ளது. இயக்கம் மற்றும் பராமரிப்புச் செலவுகள் கணிசமாக அதிகரித்துள்ளதால், அரசாங்கத்துடனான சலுகை ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தக் கட்டண மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் கூறியது.
பயணிகளுக்கான சேவைத் தரத்தை தொடர்ந்து மேம்படுத்தவும், புதிய வசதிகளில் முதலீடு செய்யவும் இந்தக் கட்டண உயர்வு உதவுமென ERL தலைமை நிர்வாக அதிகாரி நூர்மா நோர் (Noormah Noor) தெரிவித்தார்.
மேலும், அடுத்த ஆண்டு ஜனவரி முதல் இணை நிறுவனங்களுடன் இணைந்து டிக்கெட் கட்டணத்தில் 30 விழுக்காடு வரை சிறப்பு தள்ளுபடி வழங்கும் திட்டங்களும் பரிசீலிக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.



