கோலாலம்பூர், மே-21, பிரபல இணையச் செய்தி ஊடகமான MalaysiaKini-யின் பணியாளரும் இளம் செய்தியாளருமான பிரசாத் மைக்கல் ராவ் 34 வயதில் அகால மரணமடைந்துள்ளார்.
உள்ளூர் ஊடகத் துறையினர் மத்தியில் இது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்தாண்டு சாலை விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த பிரசாத், இடுப்புக்குக் கீழே செயல் இழப்புக்கு ஆளானதாகத் தெரிகிறது.
நுரையீரல் கோளாறும் ஏற்பட்டு அடிக்கடி தீவிர சிகிச்சைப் பிரிவுக்குச் சென்று வருவதுமாகவும் அவர் இருந்துள்ளார்.
அப்படி நேற்று தொடர் சிகிச்சையின் போது அவருக்கு வலிப்பு ஏற்பட்டதாக குடும்ப உறுப்பினர்கள் கூறினர்.
எனினும், சவப்பரிசோதனை அறிக்கை இன்னும் கிடைக்காததால், அவரின் மரணத்துக்கான உண்மைக் காரணம் இன்னும் தெரியவில்லை என அவர்கள் தெரிவித்தனர்.
பிரசாத் மைக்கல் ராவின் மறைவுக்கு தொடர்புத் துறை அமைச்சர் Fahmi Fadzil-லும் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவரின் குடும்பத்தாருக்கும் MalaysiaKini பணியாளர்களுக்கும் அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும் Fahmi தனது X தளத்தில் கூறினார்.
2010-ஆம் ஆண்டு இளம் செய்தியாளராக MalaysiaKini-யில் இணைந்த பிரசாத், தனது கடின உழைப்பாலும் திறமையாலும் நிருபர், தொகுப்பாளர், செய்தி வாசிப்பாளர், செய்தியாசிரியர், செய்தித் தொகுப்பாசிரியர் என படிப்படியாக உயர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்னாரின் ஆத்ம சாந்தியடைய வணக்கம் மலேசியாவும் பிராத்திக்கிறது.