
பெய்ஜிங், அக்டோபர்-31 -அமெரிக்காவின் பிரபல தொழில்நுட்ப நிறுவனமான NVIDIA-வின் தலைமை நிர்வாக அதிகாரி Jensen Huang-கை சீனா உளவுப் பார்க்க முயன்றதாக வெளியான தகவலை, பெய்ஜிங் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகளை மேற்கோள்காட்டி, The New York Times வெளியிட்ட செய்தியில், சிங்கப்பூரைத் தளமாகக் கொண்ட Megaspeed நிறுவனத்தின் முன்னாள் நிர்வாகி Alice Huang, சீனாவுக்கு இரகசியத் தகவல்களை வழங்கியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
அவர், NVIDIA தலைமை நிர்வாக அதிகாரியுடன் நெருங்கிய தொழில்முறை உறவை ஏற்படுத்திக்கொண்டதாகவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டது.
எனினும், இந்தக் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்ற யூகங்கள் என்றும், சீனாவின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் முயற்சி என்றும் அந்நாட்டு வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் Guo Jiakun தெரிவித்துள்ளார்.
இதனிடையே, Alice Huang உடனான Jensen Huang-ஙின் சந்திப்புகள் வழக்கமான வர்த்தக நடவடிக்கைகளின் ஒரு பகுதியே என NVIDIA விளக்கமளித்துள்ளது.
தங்களது வாடிக்கையாளர்களுக்கு தேசியப் பாதுகாப்பு தொடர்பான இரகசியத் தகவல்கள் எதுவும் வழங்கப்படுவதில்லை என்றும் அந்நிறுவனம் கூறியது.
AI தொழில்நுட்பத்தில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே கடும் போட்டி நிலவும் சூழலில், இந்த உளவு குற்றச்சாட்டு வெளியாகியுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது.



