
மொத்தம் RM1.097 மில்லியன் லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் ம.இ.கா துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ ஸ்ரீ எம். சரவணன் இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில், அவருக்கு RM450,000 ஜாமீன் நிர்ணயிக்கப்பட்டது.
இந்த வழக்கின் அடுத்த கட்ட வழக்கு நிர்வாகத்திற்காக செப்டம்பர் 29ஆம் தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சரவணன் மீதான குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவற்றை அவர் மறுத்த நிலையில், அரசுத் தரப்பு வழக்கறிஞர், அவருக்கு RM800,000 ஜாமீன் நிர்ணயிக்குமாறு நீதிமன்றத்திடம் கோரினார்.
அத்துடன், சரவணனின் கடப்பிதழை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும், மூன்று மாதங்களுக்கு ஒருமுறை அருகிலுள்ள மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
அரசுத் தரப்பு சாட்சிகளை நேரடியாகவோ மூன்றாம் தரப்பினர் மூலமாகவோ தொடர்புகொண்டு தொந்தரவு செய்யக்கூடாது என்ற நிபந்தனையையும் விதிக்குமாறு அவர் கோரினார்.
இதற்கு பதிலளித்த சரவணனின் வழக்கறிஞர் கீதன் ராம் வின்சென்ட், ஜாமீன் தொகையை RM300,000-ஆக நிர்ணயிக்குமாறு கோரியதுடன், அவரது கடப்பிதழை ஒப்படைக்க வேண்டும் என்ற அரசுத் தரப்பின் கோரிக்கைக்கும் ஆட்சேபம் தெரிவித்தார்.
சரவணன் தொடர்ந்து நாடாளுமன்றக் கூட்டங்களில் பங்கேற்று வரும் ஓர் எம்.பி. (MP) என்பதால் அவர் தலைமறைவாகும் அபாயம் இல்லை என்றும், SPRM அழைப்புக்கு இணங்க இன்று நீதிமன்றத்தில் ஆஜராகியிருப்பதே குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு தனது பெயரைத் தெளிவுபடுத்த அவர் தயாராக இருப்பதற்கான சான்று என்றும் கீதன் வாதிட்டார்.
மேலும், சென்னையிலுள்ள அப்பல்லோ (Apollo) மருத்துவமனையில் வழக்கமான மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக இந்தியா செல்ல சரவணனுக்கு கடப்பிதழ் தேவைப்படுவதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஒரு நபர் உத்தரவாதத்துடன் RM450,000 ஜாமீன் வழங்க உத்தரவிட்டார்.
மேலும், மூன்று மாதங்களுக்கு ஒருமுறை SPRM அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்றும், அரசுத் தரப்பு சாட்சிகளைத் தொந்தரவு செய்யக்கூடாது என்றும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.
இதற்கிடையே, நீதிமன்றத்திலிருந்து வெளியே வந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சரவணன், தமக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை என்று கூறினார்.
வழக்கை இழுத்தடிக்காமல் விரைந்து முடிக்குமாறு கேட்டுக்கொண்ட அவர், “என்னை வீழ்த்த நினைத்தால், உங்களின் மிகச் சிறந்த வேட்பாளரை தாப்பாவுக்கு அனுப்புங்கள்” என்றும் சவால் விடுத்தார்.



