
ஜோர்ஜ்டவுன், நவம்பர்-14 – பினாங்கில் SPM தேர்வெழுதவிருக்கும் மாணவர் ஒருவரை, ஆசிரியர் பலமுறை கன்னத்தில் அறைந்து, கிள்ளி, அவமானப்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து மாநிலக் கல்வி இலாகா விசாரணையைத் தொடங்கியுள்ளது.
புக்கிட் மெர்தாஜாம், குபாங் செமாங்கில் உள்ள SMK பெனாந்தி இடைநிலைப் பள்ளியில் இச்சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
Prinsip Perakaunan கணக்கியல் பாடத்தில் சிறந்த மதிப்பெண்களைப் பெறத் தவறியதால், சம்பந்தப்பட்ட ஆசிரியர் மாணவரைப் பலமுறை அறைந்து, உடலில் காயங்கள் ஏற்படும் அளவுக்குக் கிள்ளியதாகப் பெற்றோர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இதனால் மாணவரின் தன்னம்பிக்கை பாதிக்கப்பட்டு, பள்ளிக்குச் செல்ல அஞ்சுவதுடன், அடுத்த வாரம் தொடங்கவுள்ள SPM தேர்வையும் எழுத விரும்பவில்லை எனப் பெற்றோர் கவலைத் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் கல்வியமைச்சர் டத்தோ ஸ்ரீ ஃபாட்லீனா சிடேக்கின் கவனத்திற்கும் கொண்டுச் செல்லப்பட்டுள்ளது.
இதனிடையே, மாவட்டக் கல்வி அலுவலக அதிகாரிகள் மாணவரையும் அவரது குடும்பத்தினரையும் சந்தித்துள்ளதாகப் பினாங்கு கல்வி இலாகா இயக்குநர் Dziauddin Mat Saad தெரிவித்துள்ளார்.
மாணவர் SPM தேர்வுக்குத் தயாராகும் வகையில், அவருக்குத் தேவையான உளவியல் மற்றும் உணர்வுபூர்வமான ஆதரவை வழங்குவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.



