Latestமலேசியா

மலாக்கா மாநில அரசாங்கத்திலிருந்து திடீரென விலகியது DAP; நியமன சட்டமன்ற உறுப்பினர் மசோதாவுக்கு எதிர்ப்பு

மலாக்கா, ஜூலை-14-மலாக்கா அரசியல் அரங்கில் ஒரு முக்கிய அதிரடி திருப்பமாக, மாநில அரசாங்கத்திலிருந்து வெளியேறுவதாக DAP அறிவித்துள்ளது.

மலாக்கா சட்டமன்றத்தில், தேர்தல் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத 7 உறுப்பினர்களை நியமனம் செய்வதற்கு வழிவகுக்கும் அரசியலமைப்பு திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மலாக்கா DAP தலைவர் Khoo Poay Tiong சற்று முன்னர் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இதனை உறுதிப்படுத்தினார்.

அம்மசோதா இன்று காலை தாக்கல் செய்யப்பட்டு, விவாதத்திற்கு விடப்பட்ட பிறகு நடந்த வாக்கெடுப்பில், 23 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரித்து வாக்களித்த நிலையில், ஐவர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இந்த மசோதா ஜனநாயகக் கோட்பாடுகளுக்கு முற்றிலும் எதிரானது எனக் குறிப்பிட்ட அவர், மக்கள் பிரதிநிதிகள் மக்களால் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமே தவிர, அரசாங்கத்தால் நியமிக்கப்படக் கூடாது என திட்டவட்டமாகக் கூறினார்.

நிபுணர்கள் மற்றும் துறை சார்ந்த வல்லுநர்களின் பங்களிப்பைத் தாங்கள் மறுக்கவில்லை என்றாலும், அவர்கள் சட்டமன்றத்தில் அமர்ந்து வாக்கு அளிக்கும் அதிகாரத்தைக் கொண்ட நியமன உறுப்பினர்களாக இருக்கக் கூடாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த முடிவின்படி, பாரிசான் நேஷனல் (BN) தலைமையிலான மலாக்கா மாநில அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் DAP-யின் 2 ஆட்சிக் குழு உறுப்பினர்கள், ஒரு துணை ஆட்சிக் குழு உறுப்பினர், மற்றும் சட்டமன்ற துணை சபாநாயகர் ஆகியோர் தங்களின் பதவிகளை உடனடியாக ராஜினாமா செய்யவுள்ளனர்.

கடந்த 2021 மாநிலத் தேர்தலுக்குப் பிறகு அமைக்கப்பட்ட மலாக்கா மாநில அரசில் DAP ஒரு முக்கியப் பங்காளியாக இருந்து வந்த நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள இந்த திடீர் விலகல் மாநில மற்றும் தேசிய அளவிலான அரசியல் கூட்டணிகளில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!