
டிஸ்புர், நவம்பர்-14 – இந்தியாவின் அசாம் மாநிலத்தில், சிறிய இரக பேருந்தும் கனரக லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட கோர விபத்தில், குறைந்தது 26 பேர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
பிரபலமான காசிரங்கா தேசியப் பூங்காவுக்கு அருகே, தேசிய நெடுஞ்சாலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
பேருந்தில் கல்லூரி மாணவர்கள் உட்பட ஏராளமான பயணிகள் இருந்தனர்.
அதிவேகமாகச் சென்ற பேருந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த கனரக லாரியுடன் மோதியிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மோதலின் தாக்கத்தில் பேருந்து முற்றிலும் சேதமடைந்த நிலையில், அதற்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் போலீஸாரும் மீட்புப் படையினரும் ஈடுபட்டனர்.
இதனிடையே, விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலா 200,000 ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார்.
விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



