Latestமலேசியா

நஜிப்பின் வீட்டுக் காவல் விவகாரம்: மலேசிய வழக்கறிஞர் சங்கத்தின் மனுவுக்கு தேசிய சட்டத்துறை அலுவலகம் எதிர்ப்பு

கோலாலம்பூர், நவ 12-முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் ரசாக்கிற்கு வீட்டுக் காவல் வழங்கிய மன்னிப்பு வாரியத்தின் முடிவை எதிர்த்து மலேசிய வழக்கறிஞர் சங்கம் தாக்கல் செய்துள்ள சட்டரீதியான மனுவுக்கு தேசிய சட்டத்துறை அலுவலகம் (AGC) எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அம்முடிவு நீதிமன்றத்தின் மறுஆய்வுக்கு உட்படுத்த முடியாத விவகாரம் என்றும் அது கூறியுள்ளது.

அம்மனு இரு நாட்களுக்கு முன்புதான் தங்களுக்குக் கிடைத்ததாக மூத்த மத்திய அரசு வழக்கறிஞர் Ahmad Hanir Hambaly @ Arwi, உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின்போது தெரிவித்தார். எனவே மனுவை முழுமையாக ஆய்வு செய்து எழுத்துப்பூர்வமான ஆட்சேபனைகளைச் சமர்ப்பிக்க அவகாசம் வேண்டும் என அவர் கோரினார். நஜிப்பின் வழக்கறிஞர் Muhammad Farhan Muhammad Shafieயும் எழுத்துப்பூர்வமான வாதங்களைத் தாக்கல் செய்ய கால அவகாசம் கேட்டார்.

நீதித்துறை மறுஆய்வு தொடர்பான இறுதித் தீர்ப்பு வரும் வரை, செப்டம்பர் 18ஆம் தேதி நடைபெற்ற மன்னிப்பு வாரியத்தின் வழக்கு நடவடிக்கைகள் மற்றும் முடிவுகளைச் செயல்படுத்த இடைக்காலத் தடை விதிக்க மலேசிய வழக்கறிஞர் சங்கம் கோரியுள்ளது. வீட்டுக் காவல் ஏற்பாட்டைச் செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என்று அது வலியுறுத்தியுள்ளது. அதனைத் தொடர்ந்து, வழக்கின் விசாரணை அடுத்தாண்டு மார்ச் 17ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

கடந்த நவம்பர் 10ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மனுவில், வீட்டுக் காவல் ஏற்பாடு அரசியலமைப்பிற்கு முரணானது என்றும், அதற்கு சட்டப்பூர்வ அடிப்படை இல்லை என்றும் மலேசிய வழக்கறிஞர் சங்கம் வாதிட்டுள்ளது. கூட்டரசு அரசியலமைப்பின் 42ஆவது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள மன்னிப்பு, தண்டனை ஒத்திவைப்பு அல்லது தண்டனைக் குறைப்பு ஆகியவற்றில் வீட்டுக் காவல் அடங்காது என்றும், மலேசிய குற்றவியல் சட்டத்தில் அத்தகைய எதுவும் இல்லை என்றும் அச்சங்கம் குறிப்பிட்டுள்ளது. அம்மனுவில் கூட்டரசு பிரதேச மன்னிப்பு வாரியம், பிரதமர் துறையின் சட்டம் மற்றும் நிறுவனச் சீர்திருத்த அமைச்சு, சிறைச்சாலைத் துறை ஆணையர் மற்றும் நஜிப் ஆகியோர் பிரதிவாதிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.

நஜிப் தனது எஞ்சிய சிறைத் தண்டனையை வீட்டுக் காவலில் அனுபவிக்க உயர் நீதிமன்றம் கடந்த செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. 50 மில்லியன் ரிங்கிட் அபராதம் முழுமையாகச் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அவரது தண்டனைக் காலம் 2028ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23ஆம் தேதி வரை வீட்டுக் காவலில் தொடரும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!