Latestமலேசியா

Young Changemakers Leadership Camp 2026’: 3 நாள் தலைமைத்துவ முகாமில் 30 இளைஞர்கள் பங்கேற்பு

 

கோலாலம்பூர், அக்.07 -Bandar Tun Razak மற்றும் Cheras நாடாளுமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த 19 முதல் 21 வயதுக்குட்பட்ட 30 இளைஞர்களை சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் செயல்வீரர்களாக உருவாகும் நோக்கில் ‘Young Changemakers Leadership Camp 2026’ எனும் மூன்று நாள் தலைமைத்துவ முகாம் நடத்தப்பட்டது. அம்முகாம் அக்டோபர் 2ஆம் தேதியில் இருந்து 4ஆம் தேதி வரை நடைபெற்றது.

Asian Leadership and Sustainability Academy மற்றும் All-Party Parliamentary Group Malaysia – Sustainable Development Goals இணைந்து அம்முகாமுக்கு ஏற்பாடு செய்திருந்தன. HYO Cheras மற்றும் The Pure Life Society ஆகியவை துணை பங்காளிகளாகவும், ‘வணக்கம் மலேசியா’ ஊடகப் பங்காளியாகவும் ஆதரவு கொடுத்தன.

அம்முகாமில் தலைமைத்துவம், நிலையான மேம்பாடு, சமூகப் பிரச்சினைகள், குழுப்பணி மற்றும் சமூக ஈடுபாடு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தொடர்பாக இளைஞர்களுக்கு நடைமுறைப் பயிற்சிகள் வழங்கப்பட்டன. தேசிய ஒற்றுமை அமைச்சு, விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சு, WWF-மலேசியா மற்றும் MySkills அறக்கட்டளை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகளும் அதில் பங்கேற்றனர்.

The Pure Life Society மூலம் மேற்கொள்ளப்பட்ட சமூக ஈடுபாட்டு நடவடிக்கைகளில் பங்கேற்ற இளைஞர்கள், முகாமில் கற்றுக் கொண்ட தலைமைத்துவத் திறன்களை நடைமுறைப்படுத்தும் வாய்ப்பைப் பெற்றனர். மேலும், பண்டார் துன் ரசாக் மற்றும் செராஸ் பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்களை ஒன்றிணைத்து, பன்முகத்தன்மையை மதித்தல் மற்றும் சமூகப் பொறுப்புணர்வை வளர்க்க அம்முகாம் பெரும் பங்காற்றியது.

இதனிடையே, இளைஞர்கள் எதிர்காலத் தலைவர்களாக மட்டுமின்றி, இன்றே தங்கள் சமூகங்களுக்கு பங்களிக்கும் வகையில் அவர்களுக்கு அதிகாரமளிக்கப்பட வேண்டும் என ALSA அகாடமியின் திட்ட மேலாண்மை இயக்குனர் எஸ். பத்ம சீலன் தெரிவித்தார்.

இவ்வேளையில் அம்முகாமில் கலந்து கொண்ட சில இளைஞர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துக்கொண்டனர்.

அரசு அமைப்புகள், சிவில் சமூக நிறுவனங்கள், துறைசார் நிபுணர்கள் மற்றும் இளைஞர்களை ஒரே தளத்தில் இணைத்த அம்முகாம், சமூகப் பொறுப்புணர்வும் நிலையான வளர்ச்சிக்கான அர்ப்பணிப்பும் கொண்ட புதிய தலைமுறை தலைவர்களை உருவாக்கும் முயற்சியாக அமைந்தது என தாராளமாகக் கூறலாம்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!