அடைமழையால் கெடா, பேராக் மாநிலங்களில் திடீர் வெள்ளம்; சுமார் 2,300 பேர் பாதிப்பு

கோலாலம்பூர், அக்டோபர்-24,
அடைமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் நேற்றிரவு கெடா, பேராக் மாநிலங்கள் திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன.
வீடுகளில் வெள்ளம் புகுந்ததால் இதுவரை சுமார் 2,300 பேர் வரை தற்காலிகத் நிவாரண மையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
ஆக மோசமாக பேராக்கில் லாருட்-மாத்தாங்-செலாமா மற்றும் மஞ்சோங் மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன.
குறிப்பாக தைப்பிங், கமுந்திங் பகுதிகளில் வெள்ள நீர் பல இடங்களில் இடுப்பளவைத் தாண்டியது.
உயிரைக் காப்பாற்றிக் கொள்ள மக்கள் கைகளில் குழந்தைகளோடு கார்களின் மீதும், மதில் சுவர் மீதும் ஏறிக் கொண்ட வீடியோக்கள் வைரலாகியுள்ளன.
சாலைகளிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து அவ்விரு மாவட்டங்களிலும் 8 வெள்ள நிவாரண மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
இவ்வேளையில் கெடாவில் கூலிம், குவாலா மூடா மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
அங்கு சுமார் 50 குடும்பங்களைச் சேர்ந்த 150 பேர் 7 வெள்ள நிவாரண மையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
கெடாவில் 7 ஆறுகளில் நீர் மட்டம் அபாய அளவை எட்டியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த திடீர் வெள்ளத்தில் இதுவரை உயிர் சேதம் எதுவும் அறிவிக்கப்படவில்லை.



