
சென்னை: நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) தேர்தலில் பெரும் வெற்றியைப் பெற்றிருந்தாலும், அடுத்த அரசாங்கத்தை அமைப்பதற்கான பெரும்பான்மையை நிரூபிப்பதுல் சிக்கல் நீடிக்கிறது.
TVK 108 இடங்களை கைப்பற்றியுள்ள நிலையில், ஆட்சி அமைக்க தேவையான 118 இடங்களின் ஆதரவை உறுதிப்படுத்தும் எழுத்துப்பூர்வ ஆவணத்தை சமர்ப்பிக்க வேண்டும் என ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் வலியுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வியாழக்கிழமை ஆளுநர் மாளிகைக்கு அழைக்கப்பட்ட விஜயிடம், தற்போதைய 113 எம்.எல்.ஏக்கள் (TVK + காங்கிரஸ்) மட்டுமே இருப்பதால் அரசு அமைப்பது எப்படி என்பது குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன. மேலும் கூடுதல் ஆதரவு வழங்கும் கட்சிகள் குறித்து விளக்கமும் கேட்டறியப்பட்டது.
இதற்கு பதிலளித்த விஜய், தேவையான பட்சத்தில் சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், இடதுசாரி கட்சிகள் மற்றும் சிறிய பிராந்திய கட்சிகளின் ஆதரவுடன் எண்ணிக்கையை 118-க்கு மேல் கொண்டு செல்ல முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் VCK மற்றும் PMK ஆகியவை தங்களது தற்போதைய கூட்டணிகளால் இக்கூட்டணியில் இணைய சிக்கல் நிலவுகிறது.
இதேவேளை, ஆளுநர் முன் முன்வைக்கப்பட்ட ஆதரவு உறுப்பினர்களின் கணக்குகள் மீது திருப்தி இல்லை என கூறப்படுவதால், ஆட்சி அமைப்பது தொடர்பான இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை.
இதனால், தமிழகத்தில் அரசியல் கூட்டணி பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்து, சூழல் தொடர்ந்து பரபரப்பாக உள்ளது. அதேசமயத்தில் ஆளுநர் தாமதப்படுத்தினால் விஜய் நீதிமன்றம் செல்ல திட்டமிட்டுவருவதாகவும் சொல்லப்படுகிறது.



