Latestமலேசியா

இணையம் வழி கேக் வாங்க முயன்ற பெண்ணுக்கு 1.39 மில்லியன் ரிங்கிட் இழப்பு

மிரி, ஜூலை-17-சரவாக் மிரியில் கேக் சாப்பிடும் ஆவலில் போலி இணைய இணைப்பைத் தட்டி பெண் ஒருவர் 1.39 மில்லியன் ரிங்கிட்டைப் பறி கொடுத்துள்ளார்.

அப்பெண்ணின் நிறுவன வங்கிக் கணக்கில் நுழைய மோசடிக் கும்பலொன்று அந்த போலி இணைய இணைப்பின் மூலம் பணத்தைக் கையாடல் செய்தது கண்டறியப்பட்டதாக மாவட்ட காவல்துறைத் தலைவர் உதவி ஆணையர் Muhamad Farhan Lee Abdullah தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட 43 வயது பெண்ணிடம் இருந்து புகார் பெறப்பட்டதாகவும் அவர் கூறினார்.

சமூக ஊடகமொன்றில் கேக் விளம்பரத்தைக் கண்ட அப்பெண், கேக் வகைகளைப் பார்க்கவும் அவற்றை வாங்கவும் வழங்கப்பட்டிருந்த இணைப்பைத் தட்டிய போது அப்பெண்ணின் கைபேசித் திரை திடீரென கருமையாகி, செயல்படாமல் நின்று விட்டது.

அதனை அடுத்து அப்பெண் தனது வங்கியைத் தொடர்பு கொண்டு விசாரித்த போது, தனது நிறுவனத்திற்குச் சொந்தமான இரண்டு வங்கிக் கணக்குகளிலிருந்து அனுமதியின்றி பணம் பரிமாற்றம் செய்யப்பட்டிருப்பதைக் கண்டறிந்து அதிர்ச்சியுற்றதாக Mohamad Farhan தெரிவித்தார்.

மொத்தம் 1,389,132 ரிங்கிட் மதிப்பிலான 19 பரிவர்த்தனைகள் 15 வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு மேற்கொள்ளப்பட்டது ஆரம்பக் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கணினி குற்றங்கள் சட்டத்தின் கீழ் அச்மோசடி விசாரிக்கப்பட்டு வருவதாகவும், குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக 150,000 ரிங்கிட் அபராதம் அல்லது 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.

இவ்வேளையில் சமூக ஊடகங்களில் சந்தேகத்திற்கிடமான இணைப்புகளைத் தட்ட வேண்டாம். அதிகாரப்பூர்வ தளங்களிலிருந்து மட்டுமே செயலிகளைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

இணைய மோசடிகளுக்கு ஆட்படாமல் இருக்க கடவுச் சொற்கள், PIN எண்கள் அல்லது ஒருமுறை பயன்படுத்தும் கடவுச் சொற்களை யாருடனும் பகிர வேண்டாம் என அவர் பொதுமக்களுக்கு நினைவூறுத்தினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!