
புத்ராஜெயா, ஜூலை-24-இந்தியச் சமூகத்தின் கரங்களை வலுப்படுத்துவதற்கு தரமான கல்வி, விரிவான நல்வாழ்வு, திறன் மேம்பாடு மற்றும் சிறந்த வேலைவாய்ப்புகளே மிகவும் அடிப்படையானவை என, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.
புத்ராஜெயாவில் இந்தியச் சமுதாயத் தலைவர்களுடனான சந்திப்பின்போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.
மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணனும் அதன்போது உடனிருந்தார்.
மலேசிய இந்தியச் சமூக உருமாற்றுப் பிரிவான மித்ரா மற்றும் அனைத்துத் தொடர்புடைய நிறுவனங்களும் அடிமட்ட அளவில் தீவிரமாகச் செயல்பட வேண்டும் என, அச்சந்திப்பில் தாம் கேட்டுக் கொண்டதாக தனது ஃபேஸ்புக் பதிவில் அன்வார் குறிப்பிட்டார்.
சமூகத்தின் உண்மையான தேவைகளைக் கண்டறிந்து, செயல்படுத்தப்படும் ஒவ்வொரு திட்டமும் உரியவர்களைச் சென்றடைவதை மித்ரா உறுதிச் செய்ய வேண்டும் என்றார் அவர்.
அதே சமயம், நல்லாட்சி மற்றும் பரிவான அணுகுமுறை மூலம் நாட்டின் வளர்ச்சியில் எந்த ஒரு பிரிவினரும் பின்தங்கக் கூடாது என்பதே அரசாங்கத்தின் இலக்கு எனவும் அவர் தெரிவித்தார்.



