
ஜகார்த்தா, இந்தோனேசியா – தேசிய வகை ஜாலான் பாரிட் இப்ராஹிம் தமிழ்ப்பள்ளி, இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் நடைபெற்ற Indonesia Inventors Day (IID) 2026 சர்வதேச புத்தாக்கம் மற்றும் கண்டுபிடிப்புப் போட்டியில் “அழகு மற்றும் தனிப்பராமரிப்பு” பிரிவில் தங்கப் பதக்கம் (Gold Award) வென்று புதிய சாதனையைப் படைத்துள்ளது.
3 முதல் 6 அக்டோபர் 2026 வரை SMESCO Exhibition Hall, Jakarta, Indonesia இல் நடைபெற்ற இப்போட்டியை Indonesian Invention and Innovation Promotion Association (INNOPA) ஏற்பாடு செய்திருந்தது. உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள், ஆசிரியர்கள், ஆய்வாளர்கள், கல்வியாளர்கள், கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் பல்வேறு நிறுவனங்கள் கலந்து கொண்ட இச்சர்வதேசப் போட்டியில் 543 அணிகள், 21 நாடுகளைச் சேர்ந்த பங்கேற்பாளர்கள் மற்றும் 2,000-க்கும் மேற்பட்ட புத்தாக்கவாதிகள் மற்றும் பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர்.
இப்போட்டியில் தேசிய வகை ஜாலான் பாரிட் இப்ராஹிம் தமிழ்ப்பள்ளியைப் பிரதிநிதித்து நான்கு ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். அவர்களில் பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி கலையரசி அரிகரன், குழுத் தலைவி திருமதி ரங்கீதா சந்திரன், குழு உறுப்பினர்களான திருமதி அஸ்வினி ராமச்சந்திரன் மற்றும் செல்வி மோனிசா வெங்கடாசலம் ஆகியோர் அடங்குவர்.

குறிப்பாக, குழுத் தலைவி திருமதி ரங்கீதா சந்திரன் அவர்கள் வெளிநாட்டில் நடைபெறும் சர்வதேசப் போட்டியில் பங்கேற்று, பள்ளிக்குப் பெருமை சேர்க்க வேண்டும் என்ற தனது கனவை நனவாக்குவதற்காக மிகுந்த அர்ப்பணிப்புடனும் விடாமுயற்சியுடனும் செயல்பட்டார். அவருடைய தொடர்ச்சியான முயற்சி, குழு உறுப்பினர்களின் ஒத்துழைப்பு மற்றும் பள்ளி தலைமையாசிரியரின் ஆதரவு ஆகியவற்றின் மூலம் இச்சாதனை சாத்தியமாகியுள்ளது.
மேலும், Microsoft Showcase School என்ற சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுள்ள தேசிய வகை ஜாலான் பாரிட் இப்ராஹிம் தமிழ்ப்பள்ளி, தொழில்நுட்பம், புத்தாக்கம் மற்றும் டிஜிட்டல் கல்வியை முன்னெடுத்து வரும் பள்ளியாகவும் திகழ்கிறது.இத்தகைய சர்வதேச அங்கீகாரங்களுடன் புத்தாக்கப் போட்டியிலும் தங்கப் பதக்கம் பெற்றிருப்பது, சிறிய பள்ளிகளும் உலகளாவிய அரங்கில் சிறப்பாகச் சாதிக்க முடியும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.
இச்சாதனை குறித்து பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி கலையரசி அரிகரன் அவர்கள் கூறுகையில், “எங்கள் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் திறமைகளை சர்வதேச அரங்கில் வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்கிய அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
குறிப்பாக, எங்கள் பள்ளி சர்வதேசப் போட்டியில் பங்கேற்பதற்கு தொடர்ந்து ஆதரவும் ஊக்கமும் வழங்கிய பொந்தியான் மாவட்ட கல்வி இலாக்கா, ஜொகூர் மாநில கல்வி துறையினர் மற்றும் நன்கொடையாளர் ஆகியோருக்கு பள்ளியின் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்,” என்றார்.
தேசிய வகை ஜாலான் பாரிட் இப்ராஹிம் தமிழ்ப்பள்ளியின் இச்சர்வதேச வெற்றி, பள்ளியின் புத்தாக்கப் பயணத்திற்கு மேலும் வலுசேர்ப்பதுடன், எதிர்காலத்தில் ஆசிரியர்களும் மாணவர்களும் சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்று சிறந்த சாதனைகளைப் படைக்க புதிய உத்வேகத்தையும் வழங்கியுள்ளது.



