
சிங்கப்பூர், ஏப்ரல்-30-விமானத்தில், சக பெண் பயணியிடம் அநாகரீகமாக நடந்துகொண்ட குற்றத்திற்காக 20 வயது இளைஞர் ஒருவர் இன்று சிங்கப்பூர் நீதிமன்றத்தில் நிறுத்தப்படவுள்ளார்.
இந்தச் சம்பவம் கடந்த ஏப்ரல் 15-ஆம் தேதி, மதியம் சுமார் 1:30 மணியளவில் சிங்கப்பூர் நோக்கி வந்துகொண்டிருந்த விமானத்தில் நிகழ்ந்துள்ளது.
அவ்விளைஞர் தனக்கு அருகில் அமர்ந்திருந்த பெண் பயணியிடம் தவறான முறையில் நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், உடனடியாக இருக்கையை விட்டு எழுந்து சென்று விமானப் பணியாளர்களிடம் உதவி கோரினார்.
விமானப் பணியாளர்கள் இது குறித்து விமானியிடம் தகவல் தெரிவித்தனர்.
விமானம் சாங்கி விமான நிலையத்தில் தரையிறங்கியதும், அங்கிருந்த விமான நிலையப் போலீஸார் அந்த இளைஞரைக் கைது செய்தனர்.
பெண்ணின் கண்ணியத்திற்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவர் மீது இன்று குற்றம் சுமத்தப்படவுள்ளது.
சிங்கப்பூர் சட்டப்படி, இந்தக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம் அல்லது பிரம்படி ஆகிய தண்டனைகள் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.



