
சிரம்பான், ஜூன்-16 – போலீஸ் சோதனையிலிருந்து தப்பியோடியதாக நம்பப்படும் கார் ஒன்று சிரம்பான் , ஜாலான் துன் டாக்டர் இஸ்மாயிலில் நேற்று சுற்றி வளைக்கப்பட்டதை தொடர்ந்து அதிலிருந்த இரண்டு ஆடவர்கள் கைது செய்யப்பட்டனர்.
காலை மணி 10.30க்கு நடந்த அந்த சம்பவத்தின்போது காரில் இருந்த கருவிகளைப் பார்க்கையில் அவர்கள் அதனை கேபல்களை திருடும் நடவடிக்கைக்கு பயன்படுத்தியதாக நம்பப்படுகிறது.
இதுதவிர இரண்டு பொட்டலங்களில் இருந்த போதைப் பொருளையும் போலீசார் பறிமுதல் செய்ததாக சிரம்பான் மாவட்ட போலீஸ் தலைவர் உதவிக் கமிஷனர் முகமட் யாத்திம் ஒஸ்மான் ( Mohd Yatim Osman) தெரிவித்தார்.
அந்த காரிலிருந்த மூன்று நபர்களில் ஒருவர் தப்பியோடி விட்டதாகவும் அக்காரில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கேபல் மற்றும் இதர திருட்டு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படும் 14 கருவிகள் கண்டுப்பிடிக்கப்பட்டதாக முகமட் யாத்திம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டார்.
அந்த இரண்டு சந்தேகப் பேர்வழிகளும் தப்பியோடிய நபருடன் சேர்ந்து சிரம்பான் வட்டாரத்தில் கேபல்களை திருடிவந்ததாக நம்பப்படுகிறது.
பறிமுதல் செய்யப்பட்ட புரோட்டோன் வாஜா ஒரு பெண்ணின் பெயரில் இருந்ததாகவும் தப்பியோடிய சந்தேகப் பேர்வழியின் மனைவிக்கு அக்கார் சொந்தமானது என விசாரணையில் தெரியவந்தது.



