
கோலாலம்பூர், ஏப்ரல்-15-நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் கையிருப்பு ஜூன் இறுதி வரை தட்டுப்பாடின்றி கிடைக்குமென பெட்ரோனாஸ் உத்தரவாதம் அளித்துள்ளது.
முன்னதாக மே மாதம் வரை மட்டுமே கையிருப்பு இருக்கும் என்று கணிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மேலும் ஒரு மாதத்திற்கு இந்த உத்தரவாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மத்தியக் கிழக்கு பதற்றத்தால் உலகளாவிய எரிசக்தி நெருக்கடி நிலவினாலும், விநியோகச் சங்கிலியைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாக அந்த தேசியப் பெட்ரோலிய நிறுவனம் கூறியுள்ளது.
எனவே, பொது மக்கள் பதற்றமடைந்து எரிபொருளை வாங்கிக் குவிக்க வேண்டாம் என்றும், தேவைக்கேற்ப மட்டும் வாங்குமாறும் பெட்ரோனாஸ் கேட்டுக் கொண்டுள்ளது.
மலேசியா எண்ணெய் உற்பத்தி நாடாக இருந்தாலும், ஈரான் போரின் தாக்கத்திலிருந்து முழுமையாகப் பாதுகாப்பாக இல்லை; நாட்டின் கச்சா எண்ணெய் தேவையில் 40 விழுக்காடு Hormuz நீரிணை வழியாகவே கொண்டு வரப்படுவதை பெட்ரோனாஸ் சுட்டிக் காட்டியது.



