
ஜோகூர், அக்டோபர் 8 – பள்ளி மூடப்பட்டிருந்தது தெரியாமல் பள்ளிக்குச் சென்ற 11 வயது சிறுவன், 8 வயது சிறுமி மற்றும் 18 வயது இளைஞர் ஆகிய மூன்று உடன்பிறப்புகள், இன்று காலை மோட்டார் சைக்கிள் லோரியுடன் மோதியதில் உயிரிழந்தனர்.
காலை சுமார் 7 மணியளவில் ஜோகூர் பொந்தியான் (Pontian) ஜாலான் பாரிட் ஹாஜி சிராட் (Jalan Parit Haji Sirat) பகுதியில் இந்த விபத்து நடந்தது. மூவரும் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்ததாக பொந்தியான் மாவட்ட காவல்துறை தலைவர் சூப்பிரின்தெண்டன் ஹட்ஸ்ராட் ஹுசைன் மியோன் ஹுசியான் தெரிவித்தார்.
மூடுபனி காரணமாக காற்றின் தரம் மோசமடைந்ததைத் தொடர்ந்து, ஜோகூரிலுள்ள அனைத்து பள்ளிகளும் இரண்டு நாட்களுக்கு மூடப்பட்டிருந்தன. ஆனால், பள்ளி மூடப்பட்ட தகவல் தெரியாமல் மூவரும் பள்ளிக்குச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், கூடுதல் தகவல்கள் பின்னர் வெளியிடப்படும் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.



