
கோலாலாம்பூர், மே-19-வரவிருக்கும் ஜோகூர் மாநிலச் சட்டமன்றத் தேர்தலில், பாரிசான் நேஷனல் (BN) கூட்டணி அனைத்து 56 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட முடிவு செய்திருப்பது, மத்தியில் உள்ள ஒற்றுமை அரசாங்கத்திற்கு இழைக்கப்படும் துரோகமாகாது என, அதன் பொதுச் செயலாளர் டத்தோ ஸ்ரீ Dr சம்ரி அப்துல் காடிர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
மாநில அளவில் நிலவும் தனித்துவமான அரசியல் மற்றும் சமூகச் சூழலைக் கருத்தில் கொண்டு, அடிமட்டத் தொண்டர்களின் குரலுக்குச் செவிசாய்த்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் விளக்கமளித்தார்.
ஜோகூரில் தனித்துப் போட்டியிடுவது என்பது கட்சியின் பலத்தை அடிமட்ட அளவில் நிலைநிறுத்துவதற்கான ஒரு தற்காப்பு வியூகமே தவிர, மத்திய அரசில் பக்கத்தான் ஹராப்பான் (PH) கூட்டணியுடன் கொண்டுள்ள உடன்பாட்டை முறித்துக் கொள்வதாகாது என்றார் அவர்.
முன்னதாக, இந்த சவாலை எதிர்கொள்ள PH தயாராக இருப்பதாகத் அதன் தலைவரும் பிரதமருமான டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறியிருந்தார்.
என்றாலும், ஜோகூர் தேர்தல் தொகுதிப் பங்கீடு மற்றும் மோதல்களைத் தவிர்ப்பது குறித்து அப்னோ தலைவர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் சாஹிட் ஹமிடியுடன் சுமுகமான முறையில் பேச்சுவார்த்தை நடத்த அவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.



