
புத்ராஜெயா, ஜூலை-21 – மலாக்கா, டுரியான் துங்காலில் கடந்த நவம்பர் மாதம் 3 இந்திய ஆடவர்கள் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து, வெளிப்படையான நீதி விசாரணைக்கு, தேசிய சட்டத்துறை அலுவலகமான AGC அதிகாரப்பூர்வமாக உத்தரவிட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தின் முழுமையான காரணங்களையும், மரணத்திற்கான சூழ்நிலைகளையும், குற்றவியல் கூறுகள் ஏதேனும் உள்ளதா என்பதையும் சுயேட்சையாக ஆராய்வதே இந்த விசாரணைக்கான முக்கிய நோக்கமாகும் என, AGC தெரிவித்துள்ளது.
கடந்தாண்டு நிகழ்ந்த இந்தச் சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
போலீஸ் அதிகாரியை ஓர் ஆடவர் தாக்கியதை அடுத்து இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகக் கூறப்பட்டது.
எனினும், அதற்கு குடும்பத்தார் ஆட்சேபம் தெரிவித்ததை அடுத்து, இச்சம்பவம் முன்னதாக பல கட்ட விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது.
8 மாதங்களாகியும் உருப்படியான நடவடிக்கை இல்லையே என இந்திய மக்கள் பிரதிநிதிகளும் கேள்வி எழுப்பியிருந்தனர்.
இந்நிலையில், வெளிப்படைத்தன்மையை உறுதிச் செய்வதற்காக பல்வேறு தரப்பினரின் தொடர் கோரிக்கைகளை அடுத்து, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் இந்த நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.



