
சிம்பா அம்பாட், மே-3-பினாங்கு, பெர்மாத்தாங் திங்கி, ஸ்ரீ அக்னி முனீஸ்வரர் ஆலயத்தின் நீண்ட கால நிலப் பிரச்னைக்கு தற்போது நிரந்தரத் தீர்வு காணப்பட்டுள்ளது.
இந்த ஆலயத்திற்கு 99 ஆண்டுகால நில உரிமை வழங்கப்பட்டுள்ளதாக மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ஸ்ரீ சுந்தராஜூ அறிவித்துள்ளார்.
கடந்தாண்டு ஆலய நிர்வாகத்தினர் முன்வைத்த கோரிக்கையை ஏற்று, பினாங்கு முதல்வர் மற்றும் மாநில ஆட்சிக் குழுவின் ஆதரவுடன் இந்த நில உரிமை சாத்தியமானது.
நிலத்தின் சந்தை மதிப்பு மிக அதிகமாக இருந்தபோதிலும், சமூக நலனைக் கருத்தில் கொண்டு வெறும் 1,000 ரிங்கிட் கட்டணத்தில் இந்த நிலம் ஆலயத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்தியச் சமூகம் எதைக் கேட்டாலும் முதல்வர் Chow Kon Yeow இல்லை என்று சொல்வதில்லை என, ஆலய நிர்வாகத்திடம் நிலப் பட்டாவை ஒப்படைத்த நிகழ்வில் சுந்தரராஜூ புகழாரம் சூட்டினார்.
இதன் மூலம் 2026 முதல் 2125-ஆம் ஆண்டு வரை ஆலயத்தின் நில உரிமை சட்டப்பூர்வமாக உறுதிச் செய்யப்பட்டுள்ளது.
மேலும், பினாங்கு 2030 இலக்கின் கீழ், ஆற்றோரம் அமைந்துள்ள இந்த ஆலயப் பகுதியில் இறுதிச் சடங்குகள் செய்வதற்கான தளம் ஒன்றையும் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதுவரை பினாங்கில் மொத்தம் 27 ஆலயங்களுக்குச் சட்டப்பூர்வ நில உரிமையைப் பெற்றுத் தந்துள்ளதாகக் குறிப்பிட்ட டத்தோ ஸ்ரீ சுந்தராஜூ, அனைத்து மத வழிபாட்டுத் தலங்களின் நலன்களும் தொடர்ந்து பாதுகாக்கப்படும் என உறுதியளித்தார்.



