
அங்கமாலி, மே-3-கேரள மாநிலம் அங்கமாலியில் நேற்று மதம் பிடித்த யானை தாக்கியதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
மற்றொருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கமாலி கிடங்கூர் மகாவிஷ்ணு கோவில் அருகே இச்சசம்பவம் நடந்துள்ளது.
கொல்லத்தைச் சேர்ந்த விஷ்ணு என்ற 40 வயது நபர் இந்த தாக்குதலில் உயிரிழந்தார்.
இவர் யானையை ஏற்றி வந்த வாகனத்தின் ஓட்டுநர் என்பது குறிப்பிடத்தக்கது.
‘மய்யநாடு பார்த்தசாரதி’ என்ற அந்த யானை, கோவிலில் வழிபாட்டுக்காக அழைத்து வரப்பட்டபோது திடீரென மதம் பிடித்து சங்கிலிகளை உடைத்துக்கொண்டு ஓடியது.
யானையை கட்டுப்படுத்த முயன்றபோது அதன் பாகன் பிரதீப் என்பவருக்கும் காயம் ஏற்பட்டது.
அவர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.
ஆக்ரோஷமடைந்த யானை அங்கிருந்த கார் மற்றும் இருசக்கர வாகனங்களை அடித்து நொறுக்கியதுடன், அருகிலிருந்த வீட்டின் சுவரையும் சேதப்படுத்தியது.
சுமார் 3 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு, வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி யானையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
கோடை வெப்பம் காரணமாக யானைகள் ஆக்ரோஷமாக மாறுவது அதிகரித்து வரும் நிலையில், இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



