
பேங்கோக், ஜூலை-2-தாய்லாந்தில் 11 வயது சிறுவன் ஓட்டி வந்த பிக்கப் இரக வாகனம் மோதியதில், புத்த மதத் துறவிகள் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தாய்லாந்தின் வடகிழக்கு பகுதியில் உள்ள Mukdahan மாநிலத்தில் இந்த பயங்கர விபத்து நிகழ்ந்துள்ளது.
அங்குள்ள நெடுஞ்சாலையில் 35-க்கும் மேற்பட்ட புத்த மதத் துறவிகள் பாதயாத்திரையாகச் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, 11 வயது சிறுவன் ஒருவன் தனது பெற்றோரின் பிக்கப் இரக வாகனத்தை அவர்களுக்குத் தெரியாமல் எடுத்துக்கொண்டு அதிவேகமாக ஓட்டி வந்துள்ளான்.
கட்டுப்பாட்டை இழந்த அந்த வாகனம், சாலையில் வரிசையாகச் சென்றுகொண்டிருந்த துறவிகளின் மீது பயங்கரமாக மோதியது.
இந்த கோர விபத்தில் 5 துறவிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தனர்.
மேலும் 14 துறவிகள் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகக் கூறப்படுகிறது.
விபத்தை ஏற்படுத்திய சிறுவனை போலீஸார் காவலில் எடுத்து விசாரித்து வரும் நிலையில், பிள்ளைகளைக் கண்காணிப்பதில் பெற்றோர்கள் அலட்சியமாக இருக்கக் கூடாது என மாநில ஆளுநர் எச்சரித்துள்ளார்.



