
புது டெல்லி, அக்டோபர்-12,இந்தியாவில், நடுவானில் பறந்துகொண்டிருந்த பயணிகள் விமானத்தில் power bank தீப்பிடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தலைநகர் புது டெல்லியிலிருந்து தமிழகத்தின் சென்னைக்குச் சென்றுகொண்டிருந்த IndiGo நிறுவனத்தின் 6E 6115 விமானத்தில் நேற்று இச்சம்பவம் நிகழ்ந்தது.
பயணி ஒருவரின் power bank, இருக்கைகளுக்கு மேலுள்ள பொருட்கள் வைக்கும் பகுதியில் திடீரெனத் தீப்பிடித்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள், தங்களது பைகளைக் கொண்டு தீயை அணைக்க முயன்றனர்.
எனினும், விமானப் பணியாளர்கள் தீயணைப்புக் கருவிகளைப் பயன்படுத்தி நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதையடுத்து, விமானம் ஹைதராபாத் விமான நிலையத்திற்குத் திருப்பி விடப்பட்டு, பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது.
இச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இந்திய விமானப் போக்குவரத்து விதிமுறைகளின்படி, power bank சாதனங்களைப் பயணிகள் கைப்பைகளில் மட்டுமே எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுகிறது.
அவற்றை விமானத்தின் மேல்புறப் பொருட்கள் வைக்கும் பகுதியிலோ, சரக்குப் பெட்டிகளிலோ வைக்கக்கூடாது.
தவிர, விமானப் பயணத்தின்போது power bank பயன்படுத்தி மின்னியல் சாதனங்களை சார்ஜ் செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



