
சிரம்பான், ஜூலை-27-நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் பாரிசான் நேஷனல் வெற்றிப் பெற்று ஆட்சியமைத்தால், ஆட்சிக் குழுவில் ம.இ.காவின் இரு வேட்பாளர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படும் என்ற, அதன் தலைவர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் சாஹிட் ஹமிடியின் அறிவிப்பை, ம.இ.கா தேசியத் தலைவர் தான் ஸ்ரீ எஸ். ஏ. விக்னேஸ்வரன் பெரிதும் வரவேற்றுள்ளார்.
இது இந்தியச் சமூகத்துக்கான ஓர் அங்கீகாரமாகும்; இதற்காக துணைப் பிரதமருக்கு ம.இ.கா நன்றிக் கூறுவதாக அவர் சொன்னார்.
பாரிசான் சார்பில் ம.இ.காவின் A. அச்சுதன் ஸ்ரீ தஞ்சோங் சட்டமன்றத்திலும், டத்தோ தினாளன் டி. ராஜகோபாலு சிரம்பான் ஜெயா தொகுதியிலும் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், போர்டிக்சனில் இந்தியச் சமூகத்துடனான சந்திப்பு நிகழ்வில் பேசிய சாஹிட், அச்சுதனும் தினாளனும் வெற்றிப் பெற்றால், பாரிசான் ஆட்சியில் ஆட்சிக்குழுவில் இடம் பெறுவர்; மற்ற எந்த மாநிலங்களிலும் இல்லாத அளவுக்கு நெகிரியில் 15.4 விழுக்காடு இந்திய வாக்காளர்கள் இருப்பதால் இந்தக் கூடுதல் பிரதிநிதித்துவம் சரியானதே என்றார்.
இந்நிலையில், ஆட்சிக் குழுவில் இரு இந்தியர்கள் இருந்தால் சமுதாயத்திற்கு மேலும் அதிகமாக சேவை செய்ய முடியும் என்பதால், நெகிரி இந்திய வாக்காளர்கள் இந்த அரிய வாய்ப்பை வீணாக்காமல் தேசிய முன்னணிக்கு வலுவான ஆதரவை வழங்க வேண்டுமென விக்னேஸ்வரன் கேட்டுக் கொண்டார்.
இவ்வேளையில், TVET எனப்படும் தொழில்கல்வி மற்றும் தொழில் பயிற்சியை மேற்கொள்ள இந்திய மாணவர்களுக்கு, மொத்தமுள்ள 6,000 இடங்களில் 20% வாய்ப்பு வழங்கப்படுமென்ற சாஹிட்டின் அறிவிப்பையும் விக்னேஸ்வரன் வரவேற்றார்.
2017-ல் முந்தைய தேசிய முன்னணி ஆட்சி காலத்தில் மெட்ரிகுலேஷன் படிப்புக்கு இந்திய மாணவர்களுக்கு சுமார் 2,200 இடங்கள் ஒதுக்கப்பட்டன; ஆனால் புத்ராஜெயாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு அவை 1,000-க்கும் அதிகமாகக் குறைந்து விட்டதை சுட்டிக் காட்டிய விக்னேஸ்வரன், TVET கல்விக்கு 20% வாய்ப்பு வழங்கப்படுவதை இந்தியர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
இதுபோன்ற வாய்ப்புகளும் அனுகூலங்களும் இந்தியச் சமூகத்துக்கு தொடர்ந்து கிடைத்திட, நெகிரி இந்திய வாக்காளர்கள் நன்கு சிந்தித்து ஆகஸ்ட் 1 தேர்தலில் வாக்களிக்க வேண்டுமென விக்னேஸ்வரன் கேட்டுக் கொண்டார்.



