
கோலாலாம்பூர், ஜூன்-25-மலேசியாவின் முன்னணி அரசியல் தலைவர்களின் செயல்பாடு குறித்து மெர்டேகா சென்டர் (Merdeka Center) நடத்திய தேசிய அளவிலான புதியக் கருத்துக்கணிப்பில், பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் 52 விழுக்காட்டு மக்களின் ஆதரவைப் பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
கடந்த மார்ச் 12 முதல் ஏப்ரல் 9-ஆம் தேதி வரை 1,209 பேரிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், நாட்டின் 7 முக்கிய அரசியல் தலைவர்களில் அன்வார் அதிகபட்ச திருப்திகரமான புள்ளிகளைப் பெற்றுள்ளார்.
இதில், அம்னோவின் முன்னாள் இளைஞர் பிரிவுத் தலைவர் கைரி ஜமாலுடின் 50 விழுக்காட்டு ஆதரவுடன் மிக நெருக்கமான இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார்.
அவரைத் தொடர்ந்து 8-ஆவது பிரதமரும் பெர்சாத்து கட்சித் தலைவருமான தான் ஸ்ரீ முஹிடின் யாசின் 36 விழுக்காட்டு ஆதரவையும், முன்னாள் பொருளாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரஃபிஸி ரம்லி 32 விடுக்காட்டு ஆதரவையும் பெற்றுள்ளனர்.
பாஸ் கட்சியின் தலைவர் தான் ஸ்ரீ அப்துல் ஹடி அவாங் 25 விழுக்காட்டு ஆதரவைப் பெற்றுள்ள வேளை, துணைப் பிரதமரும் அம்னோ தலைவருமான டத்தோ ஸ்ரீ அஹ்மாட் சாஹிட் ஹமிடி மிகக் குறைந்த அளவாக 24 விழுக்காட்டு ஆதரவை மட்டுமே பெற்றுள்ளார். மேலும், 61 விழுக்காட்டு மக்கள் சாஹிட்டின் செயல்பாடுகளில் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
இவ்வேளையில், உலகளாவியப் பொருளாதார சவால்கள் நிலவினாலும், மலேசியா சரியான பாதையில் தான் சென்று கொண்டிருப்பதாக, 47 விழுக்காட்டு மக்கள் நம்புகின்றனர்.
அதே சமயம், 73 விழுக்காட்டு மக்கள் தங்களின் வாழ்வாதாரப் பொருளாதாரப் பிரச்சினைகளே நாட்டின் மிக முக்கிய சவாலாக இன்னும் நீடிப்பதாகக் குறிப்பிட்டுள்ளதாகவும் மெர்டேகா சென்டர் ஆய்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது.



