
புத்ராஜெயா, ஜூன்-27 – டத்தோ ஸ்ரீ ரஃபிசி ரம்லியின் பதவி துறப்பால் காலியான பொருளாதார அமைச்சர் பொறுப்புகள், இரண்டாவது நிதியமைச்சர் டத்தோ ஸ்ரீ அமீர் ஹம்சா அசிசானுக்கு வழங்கப்பட்டுள்ளன.
நிதியமைச்சின் பணிகளோடு பொருளாதார அமைச்சின் பொறுப்புகளையும் அமீர் ஹம்சா கூடுதலாக கவனித்து வருவார் என, பிரதமர் முடிவுச் செய்துள்ளார்.
புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அத்தகவலைப் பிரதமர் தெரிவித்ததாக, அரசாங்கத் தலைமைச் செயலாளர் தான் ஸ்ரீ ஷம்சுல் அஸ்ரி அபு பாக்கார் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறினார்.
இது உடனடியாக அமுலுக்கு வருவதாகவும் அவர் சொன்னார்.
பொருளாதார அமைச்சர் என்ற வகையில் அமீர் ஹம்சாவின் முதன்மைப் பணி, ஜுலை 31-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள 13-ஆவது மலேசியத் திட்டத்தின் ஆவணங்களை மறு ஆய்வு செய்து, ஒழுங்குப்படுத்துவதேயாகும்.
பல்வேறு அமைச்சுகளிடமிருந்து கிடைக்கப் பெற்றுள்ள கூடுதல் பரிந்துரைகள், அமைச்சரவையின் கருத்துகள் போன்றவற்றை, இந்த மறுஆய்வில் அமீர் ஹம்சா கவனத்தில் எடுத்துக் கொள்வார் என, தான் ஸ்ரீ ஷம்சுல் தெரிவித்தார்.
பி.கே.ஆர் கட்சித் தேர்தலில் துணைத் தலைவர் பதவியைத் தற்காக்கத் தவறியதால், அமைச்சர் பொறுப்பிலிருந்து விலகுவதாக மே 28-ஆம் தேதி ரஃபிசி அறிவித்தார்.
அது இம்மாதம் 17-ஆம் தேதி நடப்புக்கு வந்தது.