
கோலாலம்பூர், மே-25-கல்வி நிறுவனங்களில் அதிகரித்து வரும் பாலியல் முறைகேடு புகார்கள், சமூகத்தின் நம்பிக்கைக்கு துரோகம் இழைக்கும் செயல் என்றும், இது பெரும் கவலையளிப்பதாகவும் DSK எனப்படும் Dinamik Sinar Kasih சங்கம் தெரிவித்துள்ளது.
இது குறித்து கருத்துரைத்த அச்சங்கத்தின் தலைவர் டத்தோ என். சிவகுமார், பள்ளிக்கூடங்கள் மாணவர்களுக்கு பாதுகாப்பான இடமாக இருக்க வேண்டும் என்றும், இத்தகைய குற்றங்கள் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நீண்டகால மன உளைச்சலை ஏற்படுத்தும் என்றும் கூறினார்.
இந்த விவகாரத்தில் கல்வி அமைச்சர் ஃபாட்லீனா சிடேக் இன்னும் தீவிரமான மற்றும் விரிவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
கண்காணிப்பு முறையை வலுப்படுத்துதல், உள்விசாரணைகளை விரைவுபடுத்துதல் மற்றும் மாணவர்களுக்கான பாதுகாப்பான புகார் தளங்களை உருவாக்குதல் ஆகியவை இதில் அடங்கும்.
மேலும், ஆசிரியர்களுக்கு அவ்வப்போது உளவியல் ரீதியான பரிசோதனைகளை மேற்கொள்வதோடு, மாணவர்களுக்கான சுய பாதுகாப்பு விழிப்புணர்வையும் விரிவுபடுத்த வேண்டும் என டத்தோ சிவகுமார் பரிந்துரைத்துள்ளார்.
அதே வேளையில், பெரும்பாலான ஆசிரியர்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்றுவதால், ஒரு சிலரின் தவறான செயல்களுக்காக ஒட்டுமொத்த ஆசிரியர் சமூகத்தையும் மக்கள் தவறாக சித்தரிக்க வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.



