சிங்கப்பூரில் சுயமாக தீவிரவாதிகளாக மாறிய 3 மாணவர்கள் கைது

சிங்கப்பூர், ஜூலை-28-சிங்கப்பூரில் தீவிரவாத அமைப்புகளின் கருத்துக்களால் இணையம் வாயிலாக சுயமாக தீவிரவாதிகளாக மாறிய 14 முதல் 19 வயது வரையிலான 3 மாணவர்கள், உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைதுச் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த மூன்று சம்பவங்களுக்கும் இடையே நேரடித் தொடர்பு இல்லை என்றாலும், இவர்கள் மூவரும் வெவ்வேறு இடங்களில் கொடூரத் தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டிருந்ததாக, மூத்த அமைச்சர் கே. சண்முகம் செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
கைதுச் செய்யப்பட்டவர்களில் 14 வயது நிரம்பிய இரண்டாம் படிவ மாணவன் ஒருவனும் அடங்குவான்.
ஜூன் மாதப் பள்ளி விடுமுறையின் போது, தனது பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மீது கத்திக்குத்துத் தாக்குதல் நடத்த அவன் 21 பக்கத் திட்டத்தைத் தயாரித்து வைத்திருந்த நிலையில், கடந்த மே மாதம் கைதுச் செய்யப்பட்டான்.
மற்றொரு 19 வயது மாணவனோ, இராணுவ முகாம் மற்றும் சக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்தான்; அதே சமயம் 15 வயது மாணவன் பிரஷர் குக்கர் வெடிகுண்டுத் தாக்குதலுக்குத் திட்டமிட்டிருந்தான்.
கடந்த பத்தாண்டுகளில் தீவிரவாதப் போக்கினால் கைது செய்யப்பட்ட 23 இளைஞர்களில் பாதி பேர் சிங்கப்பூரிலேயே தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இணையம் மூலம் தீவிரவாதம் பரவுவதைத் தடுக்கப் பெற்றோர்களும் பொது மக்களும் விழிப்புடன் இருக்குமாறு, சிங்கப்பூரின் தேசியப் பாதுகாப்புக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான சண்முகக் கேட்டுக் கொண்டார்.



