
ஜோகூர் பாரு, நவம்பர் 3 – கெம்பாஸ் பாரு முதல் பாசிர் கூடாங் (Kempas பாரு – Pasir Gudang) செல்லும் ரயில் பாதையில், நேற்று பிற்பகல் சுமார் 1.10 மணியளவில் சரக்கு ரயிலின் இன்ஜினில் தீப்பற்றியது.
தஞ்சோங் பெலெப்பாஸ் துறைமுகம் (Pelabuhan Tanjung Pelepas) பகுதியிலிருந்து பாசிர் கூடாங் (Pasir Gudang) நோக்கிச் சென்றுகொண்டிருந்த சரக்கு ரயிலின் இன்ஜினில் தீ ஏற்பட்டதை ஓட்டுநர் கவனித்ததும், உடனடியாக ரயிலை நிறுத்தினார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினர் பிற்பகல் 2.50 மணியளவில் தீயை முழுமையாக அணைத்தனர். இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இருப்பினும், ரயில் இன்ஜினில் சுமார் 5 விழுக்காடு சேதம் ஏற்பட்டது.
தீ விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய, அந்த இன்ஜின் கெம்பாஸ் பாரு பணிமனை ( Depoh Kempas Baru) கொண்டு செல்லப்பட்டு ஆய்வு செய்யப்படுகிறது.
மேலும், மலாயன் ரயில்வே நிறுவனமான KTMB, பேராப்பிட் மொபிலிட்டி (Berapit Mobility) மற்றும் ரயில் சொத்துக் கழகமான RAC ஆகியவை இணைந்து விசாரணை நடத்தவுள்ளன.



