
கோலாலம்பூர், ஏப்ரல்-16-தன்னைத் தற்காக்க முடியாமல் நிலைகுலைந்து போயிருந்த ஒருவரை, ஆடவர் ஒருவர் கொடூரமாகத் தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பொது மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வீடியோவில், பாதிப்புக்குள்ளான நபர் தன்னைத் தற்காத்துக் கொள்ள முடியாத நிலையில் இருப்பதைக் காண முடிகிறது.
அந்த நிலையிலும், சந்தேக நபர் அவரை மீண்டும் மீண்டும் முகத்தில் குத்துவது பார்ப்பவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
அடிவாங்கியவர், ஒன்றும் செய்ய இயலாது அவர் பாட்டுக்கு நடந்துசெல்வதோடு வீடியோ முடிகிறது.
இத்தாக்குதல் எங்கு நடந்தது அல்லது இதற்கான காரணம் என்ன என்பது குறித்த அதிகாரப்பூர்வத் தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
இருப்பினும், தாக்குதல் நடத்தியவரின் முகம் வீடியோவில் தெளிவாகத் தெரிவதால், அவரை அடையாளம் காணும் முயற்சியில் இணையவாசிகளே தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
சந்தேக நபர் தப்பிவிடக் கூடாது என்றும், போலீஸார் விசாரித்து உடனடியாக அவரைக் கைதுச் செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக வலைத்தளங்களில் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.



