
பாகிஸ்தான், மே-25–பாகிஸ்தானில் இராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை ஏற்றிச் சென்ற ரயிலை குறிவைத்து நடத்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதலில் குறைந்தது 24 பேர் உயிரிழந்ததுடன், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட கார் ஒன்று ரயிலின் பெட்டியுடன் மோதியதைத் தொடர்ந்து இந்த வெடிப்பு ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களில் இராணுவ வீரர்களும் அடங்குவதாக கூறப்படுகிறது. வெடிப்பின் தாக்கத்தால் ஒரு ரயில் பெட்டி தடம் புரண்டதுடன், அருகில் இருந்த வாகனங்களும் சேதமடைந்தன.
பெருநாள் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் சென்றுகொண்டிருந்த இராணுவத்தினரே இந்த ரயிலில் பயணித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
மீட்புப் பணியாளர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பியதுடன், அப்பகுதியில் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தினர்.



