
ஜோகூர் பாரு, அக்டோபர் 6 – உகாண்டாவிலிருந்து மலேசியாவிற்குள் கடத்த முயன்ற 11.8 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 637,000 கிலோ கொக்கோ விதைகளை, மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு ஆணையம் (AKPS) பாசிர் கூடாங் துறைமுகத்தில் பறிமுதல் செய்துள்ளது.
கடந்த அக்டோபர் 3ஆம் தேதி மாலை 3.50 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், கொள்கலனிலிருந்த கொக்கோ விதைகளுக்கான ஆவணங்கள் முழுமையற்றதாகவும் சந்தேகத்திற்குரியதாகவும் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து முழு சரக்கும் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
2011ஆம் ஆண்டு மலேசிய தனிமைப்படுத்தல் மற்றும் ஆய்வுச் சேவைகள் சட்டத்தின் கீழ், முரண்பாடான தகவல்களை அறிவிப்பது குற்றமாகும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் 50,000 ரிங்கிட் வரை அபராதம் அல்லது 2 ஆண்டுகள் வரை சிறை, அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். மீண்டும் குற்றம் செய்தால் 75,000 ரிங்கிட் வரை அபராதம் அல்லது 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.



