
கோலாலம்பூர், ஆகஸ்ட் 7 – 19 வயதுடைய கல்லூரி மாணவி, புதிதாகப் பிறந்த பெண் குழந்தையை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு குளுவாங் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
கடந்த ஜூலை 29-ஆம் தேதி தாமான் செத்தியா முத்தியாராவிலுள்ள ஒரு வீட்டில் குழந்தையை கொலை செய்ததாக, குற்றவியல் சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்புக்குட்பட்டதால், குற்ற ஒப்புதல் பதிவு செய்யப்படவில்லை.
இந்தக் குற்றத்திற்கு ஜாமீன் வழங்கப்படாததால், நீதிமன்றம் ஜாமீனை மறுத்தது. பிரேதப் பரிசோதனை மற்றும் இரசாயன ஆய்வு அறிக்கைக்காக வழக்கு அக்டோபர் 8-ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
முன்னதாக, குத்துக் காயங்களுடன் புதிதாகப் பிறந்த குழந்தையின் உடல் கழிப்பறையில் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, மாணவியும் அவரது காதலரும் கைது செய்யப்பட்டனர்.
மருத்துவ பரிசோதனையில் மாணவி சமீபத்தில் குழந்தை பெற்றிருந்ததும், மேலும் அவரது கருப்பையில் இருந்த இரண்டாவது குழந்தை பின்னர் பாதுகாப்பாகப் பிறந்ததும் தெரியவந்தது.



