
கோலாலம்பூர், ஆகஸ்ட்-28–பேச்சுரிமை, பொது விமர்சனம் மற்றும் அமைதியான முறையில் ஒன்றுகூடுதல் தொடர்பில் மாணவர்கள் மீது மேற்கொள்ளப்படும் அனைத்து ஒழுங்கு நடவடிக்கைகளையும் உடனடியாக நிறுத்துமாறு உயர்கல்வி அமைச்சு அனைத்து பொதுப் பல்கலைக்கழகங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.
‘1971 பல்கலைக்கழகங்கள் மற்றும் பல்கலைக்கழகக் கல்லூரிகள் சட்டம்’ (AUKU) மற்றும் மாணவர் ஒழுங்குமுறை விதிகளின் கீழ், மாணவர்கள் மன்றங்கள் மற்றும் சங்கங்களை நிர்வகித்தல், மாணவர் நடவடிக்கைகளை நிர்வகிப்பது, கருத்துகளை வெளியிடுதல், ஒன்றுகூடுதல், தகவல் தொடர்பு தளங்களைப் பயன்படுத்துதல் மற்றும் ஆவணங்களைப் பரப்புதல் போன்றவற்றுக்கு விதிக்கப்பட்டுள்ள சில கட்டுப்பாடுகள் தற்காலிகமாக அமல்படுத்தப்படாது என அமைச்சு தெரிவித்துள்ளது.
தங்களது கருத்துகள் அல்லது விமர்சனங்களை வெளிப்படுத்தியதற்காக கட்டொழுங்கு நடவடிக்கைகளுக்கு ஆளாகும் மாணவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளைத் தளர்த்த வேண்டும் என்ற பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அவ்வாறு செய்யப்படுகிறது. AUKU சட்டத்தை முழுமையாக ரத்து செய்வதற்கு காலம் தேவைப்படும் என்பதால், பல்கலைக்கழக அளவிலான விசாரணைகளை முதலில் நிறுத்த வேண்டும் என்றும் அன்வார் கூறியிருந்தார்.
இவ்வேளையில், பேச்சு மற்றும் ஒன்றுகூடும் சுதந்திரம் பொறுப்புணர்வோடும் சட்டத்தை மதித்தும் இருக்க வேண்டும் என உயர்க்கல்வி அமைச்சு வலியுறுத்தியுள்ளது. வன்முறை, பொதுச் சொத்துக்களைச் சேதப்படுத்துதல், குற்றச்செயல்கள், கல்விசார் முறைகேடுகள் மற்றும் ஒழுங்கு விதிமீறல்கள் தொடர்ந்து நடைமுறையில் உள்ள சட்டங்களின்படி கையாளப்படும். AUKU-வின் நேரடி வரம்பிற்குள் வராத சர்வதேச இஸ்லாமியப் பல்கலைக்கழகம் மலேசியா மற்றும் Universiti Teknologi MARA ஆகியவற்றிலும், மாணவர் விதிமுறைகள் AUKU சீர்திருத்தங்களுக்கு ஏற்ப உள்ளனவா என்பது மறுஆய்வு செய்யப்படும் என அது கூறியது.
AUKU சட்டத்தை ரத்து செய்வதற்கான மசோதா இவ்வாண்டு மக்களவையில் தாக்கல் செய்யப்படும் என அன்வார் அண்மையில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.



