Latestமலேசியா

மனித மூலதன மேம்பாட்டில் சிறந்த பங்களிப்பு: 25-வது HRD விருதுகள் விழா

கோலாலம்பூர், நவ.27-மனித மூலதன மேம்பாட்டில் சிறந்து விளங்கும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களைக் கௌரவிக்கும் வகையில், மனித வள மேம்பாட்டுக் கழகம் (HRD Corp) ஏற்பாடு செய்த 25-வது HRD விருதுகள் 2026 விழா, அண்மையில் கோலாலம்பூர் Bangsar Southத்தில் நடைபெற்றது. மனித வள அமைச்சின் ஆதரவுடன் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை, மனித வள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தொடக்கி வைத்தார்.

2001ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட HRD விருதுகள், பணியாளர்களின் திறன் மேம்பாடு, பயிற்சி மற்றும் பணியிடக் கற்றலில் சிறந்த பங்களிப்பை வழங்கும் நிறுவனங்கள், பயிற்சி வழங்குநர்கள், பயிற்சியாளர்கள் ஆகியோரை அங்கீகரித்து வருகிறது. இவ்வாண்டு விருதுகள், பயிற்சிக்கான முதலீடுகள் மற்றும் அவற்றின் மூலம் கிடைத்த பயனுள்ள முடிவுகளுக்கு முக்கியத்துவம் அளித்தன.

விழாவில் உரையாற்றிய டத்தோ ஸ்ரீ ரமணன், மாறிவரும் தொழில்துறைத் தேவைகளைச் சமாளிக்க மலேசியப் பணியாளர்களைத் தயார்படுத்த, அவர்களின் திறன் மேம்பாட்டில் தொடர்ந்து முதலீடு செய்வது அவசியம் என்றார். திறமையான மற்றும் போட்டித்தன்மை மிக்க பணியாளர்களை உருவாக்க முதலாளிகள், பயிற்சி வழங்குநர்கள், பயிற்சியாளர்கள் ஆகியோரின் கூட்டு முயற்சி முக்கியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதனிடையே, ஊழியர்களின் மேம்பாட்டில் முதலீடு செய்யும் முதலாளிகள், அறிவைப் பகிர்ந்து திறமைகளை வளர்க்கும் பயிற்சியாளர்கள் மற்றும் பயிற்சி வழங்குநர்களின் பங்களிப்பு நாட்டின் எதிர்காலத்திற்கு இன்றியமையாதது என HRD Corp தலைமைச் செயல் அதிகாரி DATO Shamir Aziz தெரிவித்தார். இத்தகைய முயற்சிகளுக்கு ஆதரவளித்து, பயிற்சிச் சூழலை வலுப்படுத்த HRD Corp தொடர்ந்து செயல்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இவ்வாண்டு நான்கு பிரிவுகளின் கீழ் மொத்தம் 53 விருதுகள் வழங்கப்பட்டன. அவற்றில் மிக உயரிய விருதான மனிதவள அமைச்சர் விருது, பெரிய நிறுவனப் பிரிவில் CIBA Vision Johor Sdn. Bhd.-க்கும், சிறு மற்றும் நடுத்தர நிறுவனப் பிரிவில் Above Creative Events (M) Sdn. Bhd.-க்கும் வழங்கப்பட்டன. பயிற்சி வழங்குநர் பிரிவில் Spark Activators Sdn. Bhd.-க்கும், பயிற்சியாளர் பிரிவில் கருணாமூர்த்தி காந்திக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.

 

 

வெற்றியாளர்கள் வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில், பல கட்டங்களைக் கொண்ட கடுமையான மதிப்பீட்டின் அடிப்படையில் அவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இந்நிகழ்ச்சியில் மனித வள அமைச்சின் மூத்த அதிகாரிகள், HRD Corp தலைவர் Datuk Rusli Jaafar, அதிகாரிகள் மற்றும் மலேசிய முதலாளிகள் சங்கங்களின் சம்மேளனத்தின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!