Latestமலேசியா

மலாக்கா கூட்டணி முறிவு: முடிவைத் தள்ளி வைத்து பேச்சுவார்த்தைக்கு வருமாறு DAP-க்கு அன்வார் அழைப்பு

போர்டிக்சன், ஜூலை-15-தேசிய முன்னணி தலைமையிலான மலாக்கா மாநில அரசுடனான கூட்டணியிலிருந்து DAP உறுப்பினர்கள் வெளியேறிய விவகாரம் குறித்துப் பேசிய பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், இந்த முடிவை உடனடியாகத் தள்ளிவைக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.

​மாநில நிர்வாகம் தொடர்ந்து சுமூகமாகச் செயல்படுவதை உறுதிச் செய்ய, DAP தலைவர்களும் மலாக்கா முதல்வர் டத்தோ ஸ்ரீ அப் ரவூப் யூசோவும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வை எட்ட வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

_​”நாங்கள் பல விஷயங்களில் உடன்படவில்லை என்றாலும், பொருளாதார வளர்ச்சி மற்றும் மக்கள் நலன் கருதி தொடர்ந்து செயல்படுகிறோம்”_ எனக் கூறிய பிரதமர், கருத்து வேறுபாடுகளைப் பேச்சுவார்த்தை மூலம் களைவதே சிறந்தது எனக் குறிப்பிட்டுள்ளார்.

​7 நியமன சட்டமன்ற உறுப்பினர்களை நியமிக்கும் சட்டத்திருத்தத்தைக் கண்டித்தே மாநில அரசுப் பதவிகளிலிருந்து விலகி எதிர்கட்சியாக செயல்படப் போவதாக, DAP உறுப்பினர்கள் முன்னதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினர்.

எனினும், இவர்களின் வெளியேற்றம் அரசாங்கத்தின் செயல்பாட்டைப் பாதிக்காது என முதல்வர் ரவூப் யூசோ தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!