
கெப்பாளா பாத்தாஸ், ஜூன்-28-மலேசியாவில் செயற்கை போதைப்பொருள் பயன்பாடு அபாயகரமான அளவுக்கு அதிகரித்துள்ள வேளை, இதில் சிக்கியுள்ளவர்களில் 84 விழுக்காட்டினர் இளைஞர்கள் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
தேசிய போதைப்பொருள் தடுப்பு நிறுவனமான AADK தகவலின்படி, தற்போது நாட்டில் பதிவாகும் ஒட்டுமொத்த போதைப்பொருள் வழக்குகளில் ‘ஹாபு’, ‘யா’பா மற்றும் ‘எக்ஸ்டசி’ போன்ற செயற்கை போதைப்பொருட்களின் பங்கு மட்டும் 73 விழுக்காடாக உயர்ந்துள்ளது.
இதில் மிகவும் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், இந்த செயற்கை போதைப்பொருட்களைப் பயன்படுத்துபவர்களில் 15 முதல் 39 வயதிற்குட்பட்ட இளைஞர்களே 84 விழுக்காடு வகிக்கின்றனர்.
நண்பர்களின் வற்புறுத்தல், குடும்பப் பிரச்னைகள் மற்றும் மன உளைச்சல் ஆகியவை இளைஞர்களை இந்தப்பக்கம் ஈர்க்கும் முக்கியக் காரணங்களாகும் என, AADK தலைமை இயக்குனர் டத்தோ ருஸ்லின் ஜூசோ (Ruslin Jusoh) தெரிவித்துள்ளார்.
எளிதில் கிடைப்பதும், உடனடியாக போதையேற்றுவதும் இதனை இளைஞர்கள் தங்களின் ஒரு ‘வாழ்க்கை முறை’ போல மாற்றுவதற்குக் காரணமாக அமைந்துள்ளது.
குறிப்பாக கிழக்குக் கரை மாநிலங்களில் இதன் தாக்கம் மிக அதிகமாக உள்ளது என்றார் அவர்.
பாரம்பரிய போதைப்பொருட்களை விட, இந்த செயற்கை இரகங்கள் மூளையை நேரடியாகப் பாதித்து மனநலச் சிக்கல்களை ஏற்படுத்துவதால், இதற்கான மறுவாழ்வு சிகிச்சை முறைகளை AADK தற்போது தீவிரமாக மாற்றிமைத்து வருகிறது.



