Latestமலேசியா

செம்பனை தொழில்துறையில் 40,000 தொழிலாளர்கள் பற்றாக்குறை

கோலாலம்பூர், பிப் 16 – நாட்டில் செம்பனை தொழில்துறையில் 40,000 தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த தொழில்துறையில் நவீனமயமான இயந்திர தொழிற்நுட்பம் பயன்பாடு மிகவும் குறைவாக இருப்பதால் இன்னமும் உடல் உழைப்பு தொழிலாளர்கள் தேவைப்படுவதாக தோட்ட மற்றும் மூலப்பொருள் அமைச்சர் ஜொஹாரி அப்துல் கனி தெரிவித்தார். செம்பனை குலைகளை வெட்டுவது, அதனை கொண்டுச் செல்வது, செம்பனை செடிகளுக்கு உரம் போடுவது, பூச்சிக்கொல்லி மருந்து அடிப்பது போன்றவற்றிற்கு வெளிநாட்டு தொழிலாளர்கள் அதிகம் தேவைப்படுவதாக ஜொஹாரி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். பாகான் செராய் பெரிக்காத்தான் நாடாளுமன்ற உறுப்பினர் இட்ரிஸ் அகமட் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர் , சில துறைகளில் அதிகரித்துள்ள வெளிநாட்டு தொழிலாளர்கள் மூலப்பொருள் விவசாயத் துறைகளில் வேலை செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

செம்பனை தொழில்துறையில் ஏற்பட்டுள்ள கடுமையான தொழிலாளர் பற்றாக்குறையினால் ஒரு ஆண்டுக்கு செம்பனை ஏற்றுமதியில் 7.9 பில்லியன் ரிங்கிட் இழப்பை மலேசியா எதிர்நோக்குவதாக ஜொஹாரி தெரிவித்தார்.
இதர துறைகளில் மிதமிஞ்சிய நிலையில் வெளிநாட்டு தொழிலாளர்கள் இருந்தாலும் அவர்கள் செம்பனை மற்றும் விவசாயத் துறையில் வேலைக்கு தேர்வு செய்யமுடியாத நிலை இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். நாட்டில் தயாரிப்பு தொழில்துறை மற்றும் சேவைத்துறைகளில் வேலை செய்வதற்காக அதிக அளவில் வெளிநாட்டு தொழிலாளர்கள் கொண்டு வரப்பட்டுள்ளனர். மிதமிஞ்சிய நிலையில் உள்ள வெளிநாட்டு தொழிலாளர்கள் செம்பனை துறையில் வேலை செய்வதற்கு அனுமதிக்கப்பட்டால் கடுமையாக பற்றாக்குறையை எதிர்நோக்கியுள்ள செம்பனை தொழில்துறைக்கு பெரும் உதவியாக இருக்கும் என ஜொஹாரி தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!