
பிரான்ஸ் , ஜூன்-24 – தென் பிரான்ஸில் விமானத்தின் இறக்கையிலுள்ள முக்கிய கட்டமைப்பு பகுதியில் விரிசல்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, 16 ஏர்பஸ் A380 விமானங்களுக்கு அவசர பாதுகாப்பு சோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக ஏர்பஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய விமானப் பாதுகாப்பு முகமை பிறப்பித்த உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வழக்கமான பராமரிப்பு ஆய்வுகளின்போது, விமானம் பறக்கும் போது ஏற்படும் பெரும்பாலான காற்றியல் அழுத்தங்களைத் தாங்கும் இறக்கையின் முக்கிய ஆதாரக் கம்பியில் விரிசல்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
சோதனைக்கு உட்படுத்தப்படும் 16 விமானங்களில், 15 விமானங்கள் எமிரேட்ஸ் (Emirates) நிறுவனத்திற்கும், ஒரு விமானம் காண்டாஸ் (Qantas) நிறுவனத்திற்கும் சொந்தமானவை. இதில் ஐந்து எமிரேட்ஸ் விமானங்கள் உடனடியாக ஆய்வு செய்யப்படவுள்ளன.
இந்த விரிசல்கள் இறக்கையின் கட்டமைப்பு உறுதித்தன்மையை பாதிக்கும் அபாயம் உள்ளதாக ஏர்பஸ் தெரிவித்துள்ளது. சோதனை முடிவுகளைத் தொடர்ந்து பழுதுபார்ப்பு பணிகள் தேவைப்படுமா என்பது குறித்து ஆலோசனை நடத்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, 2012ஆம் ஆண்டிலும் A380 விமானங்களின் இறக்கைப் பகுதியில் விரிசல்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து உலகளாவிய அளவில் பாதுகாப்பு சோதனைகளும் விரிவான பழுதுபார்ப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.



