போலீசுக்கு ஒரே வாரத்தில் 1,035 ‘அழைப்புகள்’; சிங்கப்பூரில் 37 வயது நபர் மீது வழக்கு

சிங்கப்பூர், மே-13 – ஒரே வாரத்தில் போலீஸ் உதவி எண்களுக்கு 1,000க்கும் மேற்பட்ட அழைப்புகளை செய்ததாக சந்தேகிக்கப்படும் 37 வயது நபர் ஒருவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.
சிங்கப்பூர் போலீஸ் படை (SPF) வெளியிட்ட தகவலின்படி, ஏப்ரல் 21 முதல் 28 வரை அந்த நபர், பல்வேறு போலீஸ் உதவி எண்களுக்கு மொத்தம் 1,035 முறை அழைத்துள்ளார்.
அழைப்புகளின் போது அவர் எதுவும் பேசாமல் இருந்ததுடன், தனது அடையாளத்தை மறைப்பதற்காக வெளிநாட்டு தொலைபேசி எண்களையும் பயன்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணையைத் தொடர்ந்து, வுட்லண்ட்ஸ் (Woodlands) போலீஸ் பிரிவு அதிகாரிகள் சந்தேகநபரை அடையாளம் கண்டு, மே 11ஆம் தேதி கைது செய்தனர்.
போலீசாரின் பணிகளைத் தடுத்ததற்கும், மற்றொருவரின் பெயரில் பதிவு செய்யப்பட்ட சிம் கார்டை குற்றச் செயல்களுக்குப் பயன்படுத்தியதற்கும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம் என SPF தெரிவித்துள்ளது.



