டாக்கா, ஆகஸ்ட்-13, வங்காளதேசத்தில் இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதல்களைத் தடுத்தும் நிறுத்தும் முயற்சிகளில் இடைக்கால அரசாங்கம் இறங்கியுள்ளது.
அவ்வகையில் இந்து மாணவர்கள் மற்றும் பிரதிநிதிகளை இடைக்கால அரசாங்கத்தின் தலைவர் முஹமட் யூனுஸ் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார்.
சிறுபான்மை மதங்களுக்கு எதிராக சில பகுதிகளில் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருப்பது அரசாங்கத்தை மிகவும் கவலையடைச் செய்துள்ளது.
எனவே, வன்முறைச் சம்பவங்களை முடிவுக்குக் கொண்டு வந்து, சிறுபான்மை இந்துக்களுக்குப் பாதுகாப்பு அளித்திடும் கடப்பாட்டை யூனூஸ் மறுஉறுதிபடுத்தினார்.
வங்கதேசத்தில் பிரதமர் ஷேக் ஹசீனா அரசாங்கம் கவிழ்க்கப்பட்ட பிறகும் கூட கலவரங்கள் அடங்கவில்லை; குறிப்பாக இந்து மற்றும் இதர சிறுபான்மை இனத்தவருக்கு எதிராக தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.
அவர்களைக் குறி வைத்து இதுவரையில் மட்டுமே அத்தகைய 250 தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
இந்து ஆலயங்கள், தேவாலயங்கள் உள்ளிட்டவை சேதப்படுத்தப்பட்ட படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகியிருந்தன.
இந்துக்களுக்கு எதிரான வன்முறைகளை வங்காளதேச இடைக்கால அரசாங்கம் தடுத்து நிறுத்த வேண்டுமென, மலேசியா உள்ளிட்ட நாடுகளிலிருந்தும் கோரிக்கைகள் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.