Latestஉலகம்

விற்பனை வீழ்ச்சி ; உலகளவில், 10 விழுக்காட்டுக்கும் அதிகமான ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளது டெஸ்லா

நியூ யார்க், ஏப்ரல் 16 – மின்சார கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா, தனது உலகளாவிய பணியாளர்களில், 10 விழுக்காட்டுக்கும் அதிகமானோரை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது.

உலக கோடீஸ்வரர்களில் ஒருவரும், டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரியுமான எலோன் மஸ்க், நேற்று தனது பணியாளர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சல் குறிப்பு வாயிலாக அதனை தெரிவித்துள்ளார்.

டெஸ்லாவின் சில துறைகளில் அளவுக்கு அதிகமான தொழிலாளர்கள் உள்ளனர். அதோடு, விரைவில் உலக மக்கள் எதிர்கொள்ளவுள்ள மோசமான பொருளாதார பின்னடைவை சமாளிக்க, அந்த ஆட்குறைப்பு நடவடிக்கை மிகவும் அவசியம் என அந்த மின்னஞ்சலில் எலோன் மஸ்க் குறிப்பிட்டுள்ளார்.

உலகம் முழுவதும் உள்ள டெஸ்லா நிறுவனங்களில் புதிதாக யாரையும் வேலைக்கு அமர்த்த வேண்டாம் எனவும் அவர் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

செங்கடலில் கப்பல் போக்குவரத்து மீது ஹூத்தி தாக்குதல்கள் மற்றும் ஜெர்மனியிலுள்ள, டெஸ்லா உற்பத்தி ஆலையில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தீ வைத்ததால் ஏற்பட்ட விநியோகச் சங்கிலி சீர்குலைவுகளே, டெஸ்லாவின் இந்த ஏமாற்றமளிக்கும் சரிவுக்கு காரணம் என கூறப்படுகிறது.

இவ்வாண்டின் முதல் காலாண்டில், டெஸ்லா விநியோகம் 8.5 விழுக்காடு குறைந்துள்ளது என டெஸ்லா அறிவித்த இரண்டு வாரங்களுக்குள் எலோன் மஸ்க் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

நேற்று டெஸ்லா பங்குகள், ஐந்து விழுக்காட்டுக்கும் கூடுதலாக சரிந்தன. அதனை தொடர்ந்து, இவ்வாண்டு இதுவரை டெஸ்லா அதன் பங்குகளின் மதிப்பில், மூன்றில் ஒரு பகுதியை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!