
கோலாலம்பூர், மார்ச் 12 – செராஸ் தாமான் மிடாவில் கடந்த மாதம் ஸ்பெய்ன்
சுற்றுப்பயணி ஒருவர் காயமடைந்த கொள்ளைச் சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
அந்த கொள்ளைச் சம்பவம் பிப்ரவரி 17ஆம் தேதி பிற்பகல் 2 மணியளவில் நிகழ்ந்ததாக செராஸ் மாவட்ட போலீஸ் தலைவர் உதவி கமிஷனர் ரோஸ்டி டாவுட் ( Mohd Rosdi Daud ) தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து சந்தேக நபர்களை கண்டுப்பிடிப்பதற்காக செராஸ் மாவட்ட போலீஸ் தலைமையகத்தைத் சேர்ந்த அதிகாரிகளைக் கொண்டு சிறப்பு குழு அமைக்கப்பட்டது.
அக்குழு மேற்கொண்ட விசாரணை மற்றும் கிடைக்கப்பெற்ற வேவு தகவலைத் தொடர்ந்து மார்ச் 6ஆம் தேதி செராஸ் பகுதியில் 27 முதல் 28 வயதுக்குட்பட்ட இருவரை போலீசார் கைது செய்ததோடு குற்றச் செயலின்போது அவர்கள் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் பல பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக ரோஸ்டி கூறினார்.
கொள்ளையடிக்கும் போது வேண்டுமென்றே காயப்படுத்தியதற்காக தண்டனைச் சட்டத்தின் 394 ஆவது பிரிவின் கீழ் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது. அவர்கள் இருவரும் விசாரணைக்கு உதவும் பொருட்டு தடுத்து வைக்கப்பட்டனர்.



